Published:Updated:

`பலமுறை தப்பித்திருக்கிறார்!' - பழநியில் கஞ்சா வழக்கில் சிக்கிய கெளசல்யாவின் தாய்

வீட்டின் அருகே கஞ்சா விற்பனை செய்ததாகப் பழநி தாலுகா காவலர்கள் அன்னலட்சுமியையும் கோதையம்மாளையும் கைது செய்திருக்கிறார்கள்.

கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி
கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி

திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா குப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கோதையம்மாள். இவரின் மகள் அன்னலட்சுமி. ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கெளசல்யாவின் தாயார்தான் இந்த அன்னலட்சுமி. கோதையம்மாள் அவரின் பாட்டி.

சங்கர் ஆணவக்கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் அன்னலட்சுமி. அவர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று குப்பம்பட்டியில் உள்ள அவர்களது வீட்டின் அருகே கஞ்சாவை விற்பனை செய்ததாகப் பழநி தாலுகா காவலர்கள் அன்னலட்சுமியையும் கோதையம்மாளையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஒண்ணே முக்கால் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கோதையம்மாள்
கோதையம்மாள்

கைது செய்யப்பட்ட கோதையம்மாள (70 வயது), அன்னலட்சுமி ஆகிய இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோதையம்மாள் கடந்த ஆண்டு ஒருமுறை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய காவல்துறையினர், "கோதையம்மாளின் கணவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். எங்களிடம் இருந்து பலமுறை தப்பித்திருக்கிறார். கடந்த ஆண்டு கோதையம்மாள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு அருகே வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருக்கும்போது அவரைக் கைது செய்தோம்.

Vikatan

அன்னலட்சுமி முதல்முறையாக கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பலமுறை எச்சரித்தும் இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவரிடமிருந்து ஒண்ணே முக்கால் கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினோம்" என்கிறார்கள்