Published:Updated:

`இரண்டு ஆடுகள் சீதனம்; டி.வியை தூக்கிக்கொண்டு ஓட்டம்!'- மதபோதகருக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்

நபுகீரா - முதும்பா
நபுகீரா - முதும்பா

மூன்று தினங்களுக்கு முன், முதும்பா வீட்டில் இருந்த டி.வி, துணிகள் உள்ளிட்ட பொருள்களைத் தூக்கிக்கொண்டு சுவர் ஏறிக் குதித்து ஓடியுள்ளார், நபுகீரா.

உகாண்டாவின் காயுங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது முதும்பா. இஸ்லாமிய மதபோதகரான இவர், சில காலங்களுக்கு முன்பு திருமணம் முடிக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில், தினசரி மசூதிக்குச் செல்லும்போது, அங்கு பிரார்த்தனைக்காக வந்த ஸ்வபுல்லா நபுகீரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாற, நபுகீராவிடம் தனது விருப்பத்தைச் சொல்லியுள்ளார். அவரும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

உகாண்டா முறைப்படி பெண் வீட்டுக்கு சீதனமாக இரண்டு ஆடுகள், இரண்டு மூட்டை சர்க்கரை, பாரம்பர்ய உகாண்டா உடை, ஒரு அட்டைப்பெட்டி உப்பு மற்றும் ஒரு குரானைக் கொடுத்து, நபுகீராவைத் திருமணம் செய்துள்ளார் முதும்பா. மூன்று தினங்களுக்கு முன், முதும்பா வீட்டில் இருந்த டி.வி, துணிகள் உள்ளிட்ட பொருள்களைத் தூக்கிக்கொண்டு சுவர் ஏறிக் குதித்து ஓடியுள்ளார், நபுகீரா.

நபுகீரா - முதும்பா
நபுகீரா - முதும்பா

அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டினர் முதும்பாவிடம் சொல்ல, சந்தேகம் அடைந்து இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, நபுகீராவைக் கைதுசெய்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துவந்துள்ளனர். நபுகீரா காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்படும்போது, அவர் ஹிஜாப் அணிந்திருந்ததால் பெண் காவலர் அவரது ஆடையைக் களைந்து சோதனை நடத்தியுள்ளார்.

அந்தச் சோதனையில், மொத்த காவல் நிலையத்துக்கும் முதும்பாவுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. நபுகீரா ஆண் என்பதும், பெண் வேடமிட்டு முதும்பாவை ஏமாற்றியதும் தெரியவந்தது. நபுகீராவின் உண்மையான பெயர் ரிச்சர்ட் துமுஷாபே என்றும் தெரியவந்துள்ளது. பணத்துக்காகப் பெண் வேடமிட்டு முதும்பாவை ஏமாற்றியுள்ளார்.

திருமணம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் நபுகீரா ஆண் என்பதை எப்படி மறைத்தார் என்பது குறித்து முதும்பா பேசியுள்ளார். அதில், ``நான் முதல்முறையாக அவளைப் பார்த்தபோது, ஹிஜாப் அணிந்திருந்தாள். ஒருநாள், அவளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று சொன்னபோது தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. நான், அவள் அத்தை வீட்டுக்குச் சென்று அவளை என் வீட்டுக்கு கூட்டிச்செல்கிறேன் என்று கூறி பெண் கேட்டேன்.

கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் துமுஷாபே
கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் துமுஷாபே

திருமணமான பிறகு இரண்டு வாரம் வரையிலும் நாங்கள் எதுவும் உடலுறவு கொள்ளவில்லை. அவள், மாதவிடாய் காலம் என்று கூறியிருந்தால் நாங்கள் உறவுகொள்ளவில்லை. அவள் நலமாகட்டும் என்று காத்திருந்தேன்" என்று கூறியுள்ளார். முதும்பாவை ஏமாற்றிய ரிச்சர்டையும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது அத்தை மீதும் உகாண்டா போலீஸ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

பின் செல்ல