Published:Updated:

நிழலுலக ராஜாக்கள் - மண்ணின் மைந்தனாக இருந்து மும்பையை நடுங்கவைத்த தாவூத் இப்ராஹிம் - பகுதி 7

தாவூத் தனது 14-வது வயதில் முதல் குற்றத்தில் ஈடுபட்டான். ஒருவர் தெருவில்வைத்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்தபோது, அதைப் பிடுங்கிக்கொண்டு தப்பி ஓடினான்.

மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் தற்போது சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டுவருகிறான். பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் தங்களது நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என்று கூறுகிறது.

யார் இந்த தாவூத் இப்ராஹிம்?

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் கேஸ்கர் என்ற சாதாராண கான்ஸ்டபிளின் மகனாக இருந்து, இன்றைக்கு உலகமே தேடும் சர்வதேச தீவிரவாதியாக உருவெடுத்தவனே தாவூத் இப்ராஹிம். கடத்தல், போதைப்பொருள், கிரிக்கெட் சூதாட்டம், மிரட்டிப் பணம் பறித்தல் என அவன் கைவைக்காத தொழிலே இல்லை.

ஹாஜி மஸ்தான் காலத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு இளம் வயது. அப்போதே கிரிமினல் செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டான். தாவூத்தின் தந்தை ஒரு நேர்மையான ஹெட்கான்ஸ்டபிள். லஞ்சமே வாங்காத காவலராக அவர் மிகவும் நேர்மையாக வாழ்ந்ததால், 12 குழந்தைகள் கொண்ட மிகப்பெரிய குடும்பத்துக்கு போதுமான வருமானம் இருக்கவில்லை. அவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு போடவே மிகவும் சிரமப்பட்டார்.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

இப்ராஹிம் தனது குடும்பத்துக்குச் சிறு கெட்ட பெயர்கூட வந்துவிடக் கூடாது என்று நினைப்பவர். மிகவும் கடினமான நிதி நெருக்கடியிலும், தனது மகன் தாவூத்தை மட்டும் ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைத்தார். அதோடு போக்குவரத்து போலீஸ் பயிற்சியிலும் தாவூத்தைச் சேர்த்துவிட்டார். 1966-ம் ஆண்டில் ஒரு முக்கியமான திருப்பம் நேர்ந்தது. வழக்கு ஒன்றில் தீர்வுகாண முடியவில்லை என இப்ராஹிம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிடைத்த குறைந்த வருமானமும் நின்றுபோனது. வீட்டில் சாப்பிடக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டனர். தாவூத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டான். டிராஃபிக் போலீஸ் பயிற்சிக்கு செல்வதையும் நிறுத்திக்கொண்டான். இயல்பான சராசரி வாழ்க்கை தாவூத்தைவிட்டு அகன்றது.

பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் தாவூத்துக்கு அதிக நேரம் கிடைத்தது. நண்பர்களுடன் தான் வசித்த டோங்கிரியில் சுதந்திரமாகச் சுற்ற ஆரம்பித்தான். அவனை கவனிக்க தந்தைக்கு நேரமில்லை. குடும்பத்துக்குச் சாப்பாடு போட சிறு சிறு வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் அவர். கஷ்டமான சூழ்நிலையிலும் எந்தக் காரணத்தைக் கொண்டும், எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் இப்ராஹிம் குற்றச் செயல்களில் மட்டும் ஈடுபடவே இல்லை. ஆனால் அவரது மகன் தாவூத் அவருக்கு நேர் எதிராகச் செயல்பட ஆரம்பித்தான். சிறு சிறு குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்தான். தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களை சேர்த்துக்கொண்டான்.

குடும்பத்தில் நிலவிய வறுமை, சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியை தாவூத்துக்கு ஏற்படுத்தியது.

தாவூத் தனது 14-வது வயதில் முதல் குற்றத்தில் ஈடுபட்டான். ஒருவர் தெருவில்வைத்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்த போது அதைப் பிடுங்கிக்கொண்டு தப்பி ஓடினான். பணத்தைப் பறிகொடுத்தவர் தாவூத்தின் தந்தையைக் கண்டுபிடித்து புகார் செய்தார். கடும் கோபமடைந்த இப்ராஹிம் மகன் தாவூத்தை கடுமையாக அடித்து உதைத்தார். சில நாள்களுக்கு மட்டும் அமைதியாக இருந்த தாவூத் மீண்டும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தான். இந்தநிலையில் இப்ராஹிமை குற்றப்பிரிவுக்கு மாற்றினர். தாயார் சொல்பேச்சை மட்டுமே கேட்கக்கூடியவனாக தாவூத் இருந்தான். ரெளடித்தனம் செய்யும்போது தாயாரின் பேச்சையும் கேட்பதில்லை.

தாவூத் இப்ராஹிம் இல்லத் திருமணம் எனத் தெரியாது! விழாவில்  பங்கேற்ற பின்னர் அதிர்ந்துபோன அமைச்சர்
தாவூத் இப்ராஹிம் இல்லத் திருமணம் எனத் தெரியாது! விழாவில் பங்கேற்ற பின்னர் அதிர்ந்துபோன அமைச்சர்

பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், தனது சகோதரர்கள் நல்ல ஆடை அணிய வேண்டும் என்றும், தாயார் தங்க நகைகளுடன் ஜொலிக்க வேண்டும் என்றும் விரும்பினான். இதற்காக உள்ளுர் ரெளடி கும்பலின் பாதையில் தாவூத் குறுக்கிட ஆரம்பித்தான்.

தாவூத்தின் சொந்த ஊரான ரத்னகிரியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் பிழைப்பு தேடி மும்பையின் டோங்கிரிக்கு வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கு தாவூத் இடவசதி செய்து கொடுத்தான். சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தான். தாவூத்தை அவர்கள் தங்களது தலைவனாகக் கருத ஆரம்பித்து அவன் சொல்லும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

அவர்களைப் பயன்படுத்தி டோங்கிரி, அக்ரிபாடா, நாக்பாடா, முஜாபிர்கானா போன்ற பகுதிகளிலிருந்த போக்ரா முஸ்லிம்களின் கடைகளிலிருந்து மிரட்டிப் பணம் பறித்தான். போக்ரா பிரிவு முஸ்லிம்கள் அமைதியை விரும்பும் வணிக வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாரிடமும் அடிதடிக்குச் செல்வதில்லை. எனவே தாவூத் ஆட்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிடுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். இந்தக் காரியத்தில் தாவூத் நேரடியாக ஈடுபடாமல் தனது ஆட்களை ஈடுபடுத்தினான்.

ஒரு சிறிய வாட்ச் கடை ஒன்றை ஆரம்பித்து, தாவூத்தும் அவனது ஆட்களும் அதைத் தங்களது அலுவலகமாகவும் பயன்படுத்திக்கொண்டனர். தெருவில் வாட்ச் வாங்க வருபவர்களை நயமாகப் பேசி கடைக்குள் அழைத்து வந்து, அவர்களிடம் பேரம் முடிந்த பிறகு வாட்சுக்கு பதில் கல்லை பேக்கிங் செய்து கொடுத்துவிடுவார்கள். வாங்கிச் சென்றவர் திறந்து கல் இருப்பதைப் பார்த்து திரும்ப வந்து கேட்டால் ’இங்கு வாங்கவே இல்லை’ என்றோ அல்லது ’பேக்கிங்கில் வாட்ச்தான் வைத்து கொடுத்தோம்’ என்றோ கூறி சாதித்துவிடுவார்கள்.

தாவூத் இப்ராஹிமுடன் சோட்டா ராஜன்
தாவூத் இப்ராஹிமுடன் சோட்டா ராஜன்

போலீஸில் புகார் செய்தால், உடனே தாவூத்தின் கூட்டாளிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்தச் சம்பவங்களின் மூலம் அவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இந்த ஊரில் எதையும் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அவ்வப்போது சில நற்செயல்களிலும் ஈடுபட்டனர். எனவே தாவூத், டோங்கிரி பகுதியில் மிகவும் பிரபலமடைய ஆரம்பித்தான்.

ஒருமுறை தாவூத்தின் நண்பன் கரீம் சித்திக்கை உள்ளுர் ரெளடி பாசு தாதாவின் அடியாளான ஹமீத் அடித்துவிட்டான். இது குறித்து தாவூத்துக்குத் தெரிய வந்தபோது கரீமை அழைத்துக்கொண்டு ஹமீத்தின் வீட்டுக்குச் சென்றான் தாவூத். ‘பாசு தாதா மீது இருக்கும் மரியாதை காரணமாகவே உன்னை விட்டுவைக்கிறேன், இல்லாவிட்டால் இருக்கும் இடம் தெரியாமல் செய்திருப்பேன்’ என்று மிரட்டிவிட்டு வந்தான். ஹமீத் பாசு தாதாவிடம் சென்றான். ‘உங்களைப்பற்றி தாவூத் மோசமாகப் பேசினான்’ என்று சொன்னான். பாசு தாதாவுக்குக் கடும் கோபம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாசு தாதாவும், தாவூத்தின் தந்தை இப்ராஹிமும் ஒருவருக்கொருவர் நன்மதிப்பு வைத்திருந்தனர். பாசு தாதா கடத்தல் செய்பவன். அவனது பொருள்கள் துறைமுகத்தில் சிக்கிக்கொண்டால் அவற்றை இப்ராஹிம்தான் வெளியில் எடுக்க உதவி செய்வார். இதற்காக பாசு தாதா இப்ராஹிமுக்கு ஓரளவுக்குப் பணமும் கொடுத்தான்.

தாவூத் தன்னை மோசமாகப் பேசிவிட்டான் என்று தெரிந்தவுடன் பாசு தாதா கோபத்தில் இப்ராஹிமை அழைத்து வரும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டான். இப்ராஹிமும் அவரது மற்றொரு மகன் சபீரும் பாசு தாதாவைப் பார்க்க வந்தனர். அவர்களிடம் ’உனது மகனை அடக்கிவைக்க மாட்டாயா? சோற்றுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட உங்களுக்குச் சாப்பாடு போட்ட என்னையே அவமதிக்கிறீர்களா?’ என்று திட்டினான். இப்ராஹிமை அனைவர் முன்னிலையிலும் பாசு தாதா அவமதித்தான். இப்ராஹிம் கூனிக்குறுகிப்போனார்.

நிழலுலக ராஜாக்கள் - மண்ணின் மைந்தனாக இருந்து மும்பையை நடுங்கவைத்த தாவூத் இப்ராஹிம் - பகுதி 7

நடந்ததை குறித்து சபீர் தனது சகோதரன் தாவூத்திடம் தெரிவித்தான். கடும் கோபமடைந்த தாவூத் எப்படியாவது பாசு தாதாவுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவெடுத்தான். பாசு தாதா அடிக்கடி எங்கு செல்கிறான் என்பதை தனது ஆட்கள் மூலம் கண்காணிக்க ஆரம்பித்தான் தாவூத். வெள்ளிக்கிழமை வழக்கமாக மஸ்தான் தலாவ் அருகிலுள்ள மசூதிக்கு பாசு தாதா நமாஸ் செய்யவருவது வழக்கம். நமாஸுக்கு வரும்போது பாசு தாதாவைத் தாக்க தாவூத் முடிவு செய்தான்.

நமாஸ் முடிந்து பாசு தாதா வெளியில் வந்தபோது தாவூத்தும் அவனது ஆட்களும் சேர்ந்து சோடாபாட்டில் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். வழக்கமாக ஒரு ராஜாவைப்போல் வந்து செல்லும் பாசு தாதாவுக்கு இந்தத் தாக்குதல் புதிதாக இருந்தது. இத்தகைய ஒரு தாக்குதலை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. படுகாயத்துடன் பாசு தாதா சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிச் சென்றான். தாவூத் விட்டுவிடவில்லை. பாசு தாதா பொதுமக்களைச் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த இடத்துக்குச் சென்று பிரமாண்ட பந்தலை கலைத்து, அடித்து உடைத்து சேதப்படுத்தினான்.

பாசு தாதா அவமானப்பட்டான். வெளியில் வருவதைக் குறைத்துக்கொண்டான். யாரையும் சந்திக்கவும் மறுத்துவிட்டான். ரெளடித் தொழிலையும் கைவிட்டுவிட்டு குடும்பத்தோடு அமைதியாக வாழ ஆரம்பித்தான் பாசு.

சிறு சிறு குற்றங்களில் ஈடுபடத் தொடங்கி தனக்கு என ஒரு கூட்டத்தை உருவாக்கியிருந்த தாவூத் இப்ராஹிம் அவனுடைய வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கான சம்பவமாக அது அமைந்தது. ஊருக்குள் ஒரு முக்கிய தாதாவாக மதிக்கப்பட்டிருந்த ஒருவனை அடித்ததோடு மட்டுமல்லாமல், தொழிலை விட்டுவிட்டுப் போக வைத்திருந்தான் தாவூத் இப்ராஹிம். மும்பையின் பரபரப்பான வாழ்க்கையில் தன்னுடைய தடத்தை அழுத்தம் திருத்தமாகப் பதித்தான் தாவூத் இப்ராஹிம்.

பகுதி 6-க்குச் செல்ல...

நிழலுலக ராஜாக்கள்: ஒதுங்கிய வரதாபாயும், எழுந்த தாவூத் இப்ராஹிமும்! நாயகனின் கதை — பகுதி 6
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு