Published:Updated:

தஞ்சை ஹோட்டலைப் பதறவைத்த நாட்டு வெடிகுண்டு வீச்சு! - பைக்கில் தப்பிய இருவரைத் தேடும் போலீஸ்

வெடிகுண்டு வீசப்பட்ட கடை
News
வெடிகுண்டு வீசப்பட்ட கடை ( ம.அரவிந்த் )

தூக்கி வீசப்பட்ட வெடிகுண்டு ஹோட்டலில் பலகாரம் வைக்கும் கண்ணாடிப் பெட்டியில் விழுந்து வெடித்தது. இதில், கண்ணாடி உடைந்து சிதறியதில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞருக்குக் காயம் ஏற்பட்டது.

தஞ்சாவூரில் டிபன் மற்றும் ஃபாஸ்ட்புட் கடை ஒன்றில் மர்ம நபர்கள் இரண்டு பேர் நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்தார். மர்ம நபர்களை போலீஸார் தேடிவரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

தஞ்சாவூர், கரந்தை செங்கல்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கரந்தை மெயின் சாலையில் ஆறுமுகம் என்ற பெயரில் உணவகம் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்திவருகிறார். நேற்று இரவு சுமார் 10:45 மணிக்கு முத்துக்குமார், தனது உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனியார் வங்கி ஒன்றில் கலெக்‌ஷன் ஏஜென்ட்டாகப் பணியாற்றிவரும் ராமாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற இளைஞர் ஆறுமுகம் கடைக்குச் சாப்பிட வந்தார். அவரை உட்கார வைத்துவிட்டு முத்துக்குமார், தோசை ஊற்றிக்கொடுக்க, வெங்கடேஸ்வரனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

வெடி பொருள்
வெடி பொருள்

அந்தச் சமயத்தில் டூ வீலரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், திடீரென ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து கடைக்குள் வீசியதுடன், அதே வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூக்கி வீசப்பட்ட வெடிகுண்டு ஹோட்டலில் பலகாரம் வைக்கும் கண்ணாடிப் பெட்டியில் விழுந்து வெடித்தது. இதில், கண்ணாடி உடைந்து சிதறியதில், டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த வெங்கடேஸ்வரனின் இடது கன்னத்தில் பட்டு காயம் ஏற்பட்டது. திடீரென எழுந்த வெடிகுண்டு சத்தம் அருகிலிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து வெங்கடேஸ்வரன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த தகவல் போலீஸாருக்குச் சென்ற நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சப்– இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டார்.

அத்துடன் இன்று வெடிகுண்டு நிபுணர்கள் வந்து மர்ம நபர்கள் வீசிய நாட்டு வெடிகுண்டின் மூலப்பொருள்களைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சணல், கூழாங்கற்கள், பால்ரஸ், இரும்புத் துகள்கள் ஆகியவற்றைக் கொண்டு அந்த நாட்டு வெடிகுண்டு தயார் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இரவு நேரம் என்பதால் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

ஹோட்டல்
ஹோட்டல்

போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, அதே பகுதியிலிருக்கும் செந்தில் என்பவரின் ஹோட்டலில் குடிபோதையில் மூன்று பேர் சாப்பிட்டதற்காகப் பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதற்கு பழிவாங்குவதற்காக வெடிகுண்டு வீச வந்தவர்கள் அந்தக் கடையில் வீசுவதற்கு பதிலாக மாற்றி பக்கத்திலுள்ள ஹோட்டலில் வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்.

அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக நாட்டு வெடிகுண்டை வீசினார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.