Published:Updated:

கல்குவாரி டு கால்வாய்... இளம்பெண்களின் சடலம் - வேலூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

வேலூரில், அடுத்தடுத்து மீட்கப்படும் இளம்பெண்களின் சடலங்கள் முதல், நூதன திருட்டால் வாகனத்தை இழந்த விவசாயி வரை..! TamilnaduCrimeDiary

வேலூர் புதுவசூர் கல்குவாரியில், கடந்த மாதம் 17-ம் தேதி, சரவணன் என்பவரின் 17 வயது மகள் சடலமாக மீட்கப்பட்டார். கையில் குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து இவர் உடல் அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், சத்துவாச்சாரி மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பிரகாஷ் (23), நவீன்குமார் (23) இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியை மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்று மது ஊற்றிக்கொடுத்து, கல்குவாரி உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, இரண்டு பேரையும் கைதுசெய்த சத்துவாச்சாரி போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாயில், கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாகத் தகவல் பரவியது. வேலூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றினர். போலீஸார் நம்மிடம் கூறுகையில், ``இறந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறார். உயிரிழந்து இரண்டு நாள்களாகியிருக்கலாம். சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவராக இருக்கலாம். இப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் துணையுடன் தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே, அந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அடுத்தடுத்து இளம்பெண்களின் மரணம் வேலூர் மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

லிஃப்ட் கொடுத்தது தப்பா?!
டூவீலரை இழந்த விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், டூவீலரில் சென்று கொண்டிருந்த விவசாயிடம் லிஃப்ட் கேட்ட இருவர், அவரது டூவீலரை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள், நன்கு தெரிந்தவர்களைக்கூட தங்கள் வாகனங்களில் ஏற்ற மறுக்கும் நிலை உருவாகியுள்ளது.

``வீட்டில் தனியாக இருந்த சென்னைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை"- புத்தாண்டில் போலீஸுக்கு வந்த போன் கால்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர், போஸ் (52). விவசாயியான இவர், இரண்டு நாள்களுக்கு முன்னர் தனது இரு சக்கர வாகனத்தில் திருவாடானை பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டி ருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அறிமுகம் இல்லாத இரண்டு பேர், தாங்கள் அவசரமாக பாரதி நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்குப் பதிலளித்த போஸ், ``எனக்கு 3 பேரை வைத்து ஓட்டத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

``பரவாயில்லை, நீங்க வண்டியில உட்கார்ந்துக்கோங்க. நாங்கள் ஓட்டுகிறோம். எங்களை இறக்கிவிட்டுட்டு நீங்க வந்திரலாம். ரொம்ப அவசரம்” என அவர்கள் வற்புறுத்தவே, அவர்களின் பேச்சை உண்மையென நம்பிய போஸ், அவர்களிடம் டூவீலரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து, மூவரும் பாரதி நகர் பேருந்து நிலையம் சென்றுள்ளனர். டூவிலரை நிறுத்திய மர்மநபர்கள், ``சார் கொஞ்சம் கீழே இறங்குங்க. நாங்கள் இறங்க வேண்டும்” என்று கூறியதால், போஸ் டூவீலரிலிருந்து இறங்கியுள்ளார். அவர் இறங்கிக் கண் இமைக்கும் நேரத்தில் டூவீலருடன் அந்த இருவரும் மாயமாகிவிட்டனர்.

தன் கண் முன்னாலேயே டூவிலர் திருடப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்த போஸ், இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருவாடனை பகுதியில் நடந்த இந்த நூதன திருட்டால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் லிஃப்ட் கேட்பவர்களைக் கண்டாலே வாகனங்களை வேகமாகச் செலுத்தத் தொடங்கிவிடுகின்றனர்.

சபாஷ்!
புத்தாண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்திய சென்னை காவல்துறை

ஒவ்வொரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போதும், போதை பார்ட்டிகள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் வாகன விபத்துகள் ஏற்படுவது சென்னையில் தொடர்ச்சியாக இருந்துவந்தது. புத்தாண்டுக்கு வெளியே செல்லும் பொதுமக்கள், குடிமகன்களின் ஆட்டத்தால் பெரிதும் அவதிக்குள்ளாவர். இந்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக சென்னை மாநகர காவல்துறை பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. மாநகரம் முழுவதும் இருந்த 59 மேம்பாலங்கள், டிச 31-ம் தேதி இரவு 7 மணிக்கே மூடப்பட்டன. ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகர கமிஷ்னர், போக்குவரத்து இணை ஆணையர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அதிகாரிகள் அனைவரும் இரவுப் பணியில் ஈடுபட்டதால், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

இரவு 1 மணிக்கு மேல் வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியதால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் வாகனத்தை தொடவே பயந்து ஒதுங்கிவிட்டனர். தாம்பரம், வேப்பேரி போன்ற ஒருசில இடங்களில் மட்டும் விபத்துகள் நேர்ந்துள்ளன. மற்றபடி போதைத் தள்ளாட்டம் இல்லாத சாலையை முதல்முறையாக இந்தப் புத்தாண்டில்தான் சென்னை மாநகரவாசிகள் அனுபவித்துள்ளனர். இந்தப் புத்தாண்டை தள்ளாட்டம் இல்லாத புத்தாண்டாகச் செய்ததற்கு, சென்னை மாநகர காவல்துறையை மனதார பாராட்டலாம்.

அடுத்த கட்டுரைக்கு