Published:Updated:

இன்ஸ்டாவில் பிகினி படம்... பேராசிரியையிடம் ரூ.99 கோடி கேட்கும் பல்கலைக்கழகம் - நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்த பெண் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் ரூ. 99 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்ஸ்டாவில் பிகினி படம்... பேராசிரியையிடம் ரூ.99 கோடி கேட்கும் பல்கலைக்கழகம் - நடந்தது என்ன?

இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்த பெண் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் ரூ. 99 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published:Updated:
இன்ஸ்டாகிராம்

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியையாகப் பணியாற்றிவந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேராசிரியையின் புகைப்படங்களைப் பார்த்தனர். அதுவும் பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்தபோது மாணவரின் பெற்றோர் அதைப் பார்த்துவிட்டனர். பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டிருப்பது குறித்து அந்த மாணவரின் பெற்றோர் எழுத்துபூர்வமாக பல்கலைக்கழகத்தில் புகார் செய்தனர். அதில் ``தங்களின் மகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு கற்றுக்கொடுக்கும் பேராசிரியையின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். அந்தப் புகைப்படங்கள் ஆபாசமாகவும், ஆட்சேபகரமாகவும், உள்ளாடை தெரியும் வகையிலும் பதிவிடப்பட்டிருந்தன. அது போன்ற படங்களை எங்களுடைய மகன் பார்க்கக் கூடாது என்பதற்காக நான் முயற்சி செய்கிறேன். ஆனால் பேராசிரியையே இது போன்று படங்களைப் பதிவிட்டிருக்கிறார்” என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சேவியர்ஸ் பல்கலைக்கழகம்
சேவியர்ஸ் பல்கலைக்கழகம்

அந்தப் புகாரின் அடிப்படையில் பேராசிரியை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் முன்பாக மாணவரின் பெற்றோர் கொடுத்த புகார்க் கடிதம் வாசித்துக்காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பணியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே பேராசிரியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து பேராசிரியை தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். அதோடு விடாமல் பல்கலைக்கழகத்துக்குக் களங்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியதற்காக ரூ.99 கோடி கொடுக்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட பேராசிரியைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முடிந்துபோன பிரச்னையை மீண்டும் கையில் எடுத்திருப்பதாக பேராசிரியை குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியையின் புகைப்படங்கள் அவர் பணியில் சேருவதற்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.