Published:Updated:

கரூர்: `வேற எதையோ திருட வந்திருக்கலாம்!' - முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த மர்மநபர்

கூஜாவைத் திருடிய மர்ம நபர்
கூஜாவைத் திருடிய மர்ம நபர்

'வேற எதையோ திருட வந்த திருடனிடம் கூஜாவை மட்டும் இழந்திருக்கிறோம். 'அந்த மர்ம நபர், காந்தி கிராமத்தில் உள்ள மற்ற வீடுகளில் திடுட முயலக்கூடாது, அந்த நபரை மக்கள் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.'

பால் வாங்குவதற்காக வீட்டின் காம்பவுண்டு கேட் தூணில் வைத்திருந்த, முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ வீட்டின் பால் கூஜாவை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டுபோன சம்பவம், கரூர் காந்தி கிராமம் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கூஜாவைத் திருடிய மர்ம நபர்
கூஜாவைத் திருடிய மர்ம நபர்

கரூர் மாவட்டம், காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். தி.மு.க-வின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பில் உள்ளார். அதோடு, 2006 - 2011-ம் பீரியடில், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு, காந்தி கிராமம் மைதானம் அருகே இந்த வீட்டை கட்டியுள்ளார். இவர், தனது வீட்டைச் சுற்றி பல இடங்களில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில், காமராஜின் மனைவி, தினமும் பால் வாங்குவதற்காக, கடந்த ஒரு வருடகாலமாக, வீட்டின் முன்பு உள்ள காம்பவுண்டு கேட்டைத் தாங்கியிருக்கும் தூண்மீது கூஜாவை வைத்து வந்திருக்கிறார்.

கரூர்: `வெளியே ஹோட்டல்; பின்புறம் சட்டவிரோத பார்!’- தோகைமலை அதிர்ச்சி
முன்னாள் எம்.எல்.ஏ காமராஜின் வீடு
முன்னாள் எம்.எல்.ஏ காமராஜின் வீடு

அதிகாலை 5.30 மணிபோல் வீட்டுக்கு முன்புவரும் பால்காரர், அந்த பால் கூஜாவில் பாலை நிரப்பி வைத்துவிட்டுச் செல்வாராம். அதன்பிறகு, காலையில் எழும் காமராஜின் மனைவி, அந்தக் கூஜாவைபோய் எடுத்து வந்து, அதில் இருக்கும் பாலை பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்படி, பால் வாங்குவதற்காக காம்பவுண்டு கேட் தூணில் வைக்கப்பட்டிருந்த கூஜாவைதான், 50 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் திருடிக்கொண்டு போன சம்பவம், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜை அதிர வைத்துள்ளது. அவர்வீட்டு பால் கூஜா மர்ம நபரால் திருட்டப்பட்ட சிசிடிவி வீடியோ புட்டேஜ் போட்டோக்களை நமக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காமராஜ்,

"கடந்த ஒரு வருடமாகவே இப்படி முதல் நாள் இரவே, பால் வாங்குவதற்காக வீட்டு காம்பவுண்டு கேட் தூணில் பால் கூஜாவை வைத்துவிடுவோம். இதுவரை அதை யாரும் எடுத்ததில்லை. அதேபோல், எங்கள் வீட்டருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு செயின் பறிப்புச் சம்பவம் மட்டுமே நடந்துள்ளது. காந்தி கிராமம் மெயின் பகுதியில் என் வீடு உள்ளதால், பெரிதாகத் திருட்டு நடந்ததில்லை. இருந்தாலும், பாதுகாப்புக்காக வீட்டைச்சுற்றி சிசிடிவி கேமராக்களை அமைத்துள்ளேன். இந்த நிலையில்தான், பால் வாங்குவதற்காக முந்தாநாள் இரவு, அந்தத் தூணில் என் மனைவி பால்வாங்கும் கூஜாவை வைத்தார். காலையில் பால் ஊற்ற வந்த பால்காரர், கூஜாவைக் காணாமல் தேடியிருக்கிறார்.

தனது வீட்டின் முன்பு காமராஜ்
தனது வீட்டின் முன்பு காமராஜ்

அதனால், பால் ஊற்றுவதற்காக மாற்றுப்பாத்திரம் கேட்க, காலிங் பெல்லை தொடர்ந்து அடித்தார். பதறியதுடித்துக்கொண்டு போய் வெளியில் பார்த்தோம். அப்போதுதான், கூஜா காணாமல் போன விஷயம் தெரியவந்தது. வேறுபாத்திரத்தில் என் மனைவி பாலை வாங்கிக்கொண்டு, பால்காரரை அனுப்பி வைத்தார். என்மகன் வீட்டுக்கு முன்பு உள்ள கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளைப் பார்த்தான். அப்போதுதான் 5.15 மணிபோல் என் வீட்டு முன்பகுதிக்கு வரும் ஒரு மர்மநபரை வீடியோ காட்சிகள் காட்டின. அவர் என் வீட்டு காம்பவுண்டு சுவர் முழுமைக்கும் ஓரமாக நடந்து போய் வீட்டை நோட்டம்விடுகிறார்.

மரங்கள் காம்பவுண்டு கேட்டுக்கு இருபுறமும் சாலையையொட்டி இருப்பதால், அதையொட்டி நின்றுகொண்டு வீட்டைப் பார்க்கிறார். என் வீட்டில் நாய் இருப்பதைப் பார்த்தாரோ என்னவோ, கால் மணிநேரம் வீட்டை நோட்டம்விட்ட அந்த மர்மமனிதர், கடைசியாக காம்பவுண்டு கேட் அருகே வருகிறார். தூணில் இருந்த பால் கூஜாவை எடுத்துக்கொண்டு, விறுவிறுவென்று சென்று மறைகிறார். இந்தக் காட்சிகளைப் பார்த்ததும் அதிர்ந்துபோயிட்டேன். அந்த மர்மமனிதர், என் வீட்டில் திருட வந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், 200 ரூபாகூட பெயராத கூஜாவை அவர் தூக்கிப்போனது, என்னைச் சிரிக்க வைத்துவிட்டது.

வீட்டை நோட்டமிடும் மர்ம நபர்
வீட்டை நோட்டமிடும் மர்ம நபர்

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பார்களே, அதுபோல் வேற எதையோ திருட வந்த திருடனிடம் கூஜாவை மட்டும் இழந்திருக்கிறோம். 'அந்த மர்ம நபர், காந்தி கிராமத்தில் உள்ள மற்ற வீடுகளில் திடுட முயலக்கூடாது, அந்த நபரை மக்கள் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்பதற்காகதான், இதைச் சொல்கிறேன். என் வீட்டில் பெரிய திருட்டை அரங்கேற்ற அந்த நபர், வேவு பார்க்ககூட வந்திருக்கலாம் இல்லையா? அதனால், எனது வீடு மற்றும் மற்ற வீடுகளில் பெரிய திருட்டுகள், கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க ஏதுவாக, காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க இருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு