Published:Updated:

`பாலியல் வழக்கு; தீயிட்டுக் கொளுத்திய கும்பல்!' - பற்றியெரிந்த தீயுடன் 1 கி.மீ ஓடிய இளம்பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப்பெண்ணை ஒரு கும்பல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது.

உன்னாவ் பகுதி
உன்னாவ் பகுதி

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி நெருக்கமாகப் பழகியுள்ளார். திருமணப் பேச்சு எடுத்தபோதெல்லாம் தட்டிக்கழித்து வந்துள்ளார்

கைது
கைது

இந்த நிலையில், தன் நண்பருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர் அளித்த புகாரில், `இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதைப் படம் பிடித்ததாக' கூறியிருந்தார்.

கைதானவர்களில் ஒருவர் காவலர்கள் பிடியிலிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த நபர் நவம்பர் 30-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ரேபரேலி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்துவருகிறது. வழக்கு விசாரணைக்காக இன்று காலை அந்தப் பெண் ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தியுள்ளனர். ஐந்து பேரில் ஒருவர் முன்னதாக பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியவர் எனக் கூறப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்ற அந்தக் கும்பல் அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டுச் சென்றது.

உன்னாவ் சம்பவம்
உன்னாவ் சம்பவம்

உடம்பில் பற்றி எரிந்த தீயுடன் உதவிக்காக அந்தப் பெண் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்துள்ளார். தன்னுடைய மொபைல் போனில் இருந்தே 112 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து உதவியை நாடியுள்ளார். அவர் கூறியதையடுத்துதான் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவரது மொபைல் போனும் தீயில் எரிந்தது. 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப்பெண் மீட்கப்பட்டார். சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

`எங்களுக்கு எதிராக நீதிமன்றம் போகலாமா?!' -உ.பி-யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

லக்னோ விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்திலிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டார். விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 18 நிமிடத்தில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். உடலில் 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் உள்ளார். லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது நீதிபதி முன்னிலையில் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தன்னை 5 பேர் கடத்திச் சென்று தீயிட்டுக் கொளுத்தியதாக கூறியுள்ளார்.

டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது
டெல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ``அந்தப் பெண் அலறல் சத்தத்துடன் எங்களை நோக்கி ஓடிவந்தார். அரைகிலோ மீட்டர் தூரம் ஓடிவந்திருப்பார். அவர் அருகில் வந்தபோதுதான் தீக்காயங்களுடன் இருக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரிந்தது, உதவிக்காக அலறினார். அவர் அருகில் வந்தபோதுதான் உதவிக்காக கூப்பிடுகிறார் என்பதே தெரிந்தது” என்றனர்.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.