Published:Updated:

வீரத் தம்பதி வீட்டை நோட்டமிட்டனர்; இரவில் நடந்த போலீஸ் சேஸிங்!- பைக்கில் தப்பிய மர்ம நபர்கள்

பி.ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டம், கடையத்தில் கொள்ளையர்களுடன் போராடிய வீரத் தம்பதிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. அவர்களிடம் அரிவாள் முனையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இன்னும் பிடிபடாத நிலையில், மர்ம நபர்கள் இருவர் அவர்களது வீட்டை நோட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வீரத் தம்பதி
வீரத் தம்பதி

நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர், சண்முகவேல். தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு பெற்றவர். அவரது மனைவி செந்தாமரை. இவர்களின் மகன்கள் இருவர் வெளிமாவட்டங்களில் வசிக்கின்றனர். மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இயற்கை விவசாயம் செய்யும் தம்பதி
இயற்கை விவசாயம் செய்யும் தம்பதி

கடையத்தில் இயற்கை விவசாயம் செய்து வந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதியர், தோட்டத்திலேயே வீடுகட்டி வசித்து வருகிறார்கள். தனியாக வசித்து வருவதால், வீட்டைச் சுற்றிலும் 14 சிசிடிவி கேமரா வைத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அவர்களின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் நுழைந்தனர். முகத்தை மறைத்தபடி வந்த மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டினார்கள்.

மர்ம நபர்கள் அரிவாளால் மிரட்டியபோதிலும், முதிய தம்பதியர் தீரத்துடன் அவர்களை விரட்டியடித்தார்கள். அதற்காக அவர்களுக்கு முதல்வரின் வீரதீர விருது வழங்கப்பட்டது. கடையம் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து சண்முகவேல் வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

அரிவாள் முனையில் கொள்ளையடிக்க முயற்சி நடந்த சண்முகவேல் வீட்டின் அருகே இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தது
பொதுமக்கள்

இந்த நிலையில், 28-ம் தேதி இரவு நேரத்தில் காவல்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சண்முகவேல் வீட்டின் அருகே இரு மர்மநபர்கள் பைக்கில் வந்து நின்றுகொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரையும் பிடிக்கச் சென்ற போலீஸாரின் பிடியிலிருந்து இருவரும் தப்பி விட்டனர்.

டார்வின், காந்தி, நியூட்டன்... மன அழுத்தம் வென்று சாதித்துக் காட்டிய உலகத் தலைவர்கள்! #NoMoreStress

சண்முகவேல் தோட்டம் உள்ள பகுதியில் நின்றிருந்த இருவரும் போலீஸார் வருவதைப் பார்த்ததும் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளனர். போலீஸார் வாகனத்தில் விரட்டியபோதிலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக அவர்கள் அந்த வீட்டை நோட்டமிட்டனர் எனவும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

சண்முகவேல்-செந்தாமரை
சண்முகவேல்-செந்தாமரை

சண்முகவேல் வீட்டில் நுழைந்த நபர்கள் இதுவரை பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், அவரது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்ட சம்பவம் பொதுமக்களுக்குக் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் சண்முகவேல் வீட்டின் அருகே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.