`உறவினர் சுருட்டிய 5 கோடி; பவுன்ஸ் ஆன 9 செக்' - குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்ஷன் தன் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் குல்ஷன் வாசுதேவ். இவர் டெல்லி காந்தி நகர் பகுதியில் கார்மென்ட்ஸ் நடத்திவந்துள்ளார். காசியாபாத், இந்திராபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா அப்ரா அப்பார்ட்மென்ட்ஸில் தன் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் அந்த அப்பார்ட்மென்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த காவலாளி சென்று பார்த்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மூன்று பேர் தரையில் கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி தன் மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு போலீஸாரை அழைத்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும் அங்கு குடியிருந்தவர்கள் விரைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தது குல்ஷன் வாசுதேவ் மற்றும் அவரது வீட்டில் இருந்த பெண்கள் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் குல்ஷன் வாசுதேவ் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணான சஞ்சனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரும் சிறிது நேரத்தில் மரணமடைந்துவிட்டார்.
இதற்கிடையில், குல்ஷன் வாசுதேவ்வின் வீட்டில் சோதனை செய்வதற்காக காவல்துறையினர் சென்றுள்ளனர். வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவுகளை உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்றனர். 3 படுக்கை அறை கொண்ட வீடு அது. வீட்டில் உள்ள அறையில் குல்ஷன் வாசுதேவ்வின் குழந்தைகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்தனர். இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டிலிருந்து சில தடயங்களைச் சேகரித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``குல்ஷன் வாசுதேவ்வுக்கு இரண்டு சகோதரர்கள். அவர்கள் டெல்லியில் வசித்துவருகின்றனர். திங்கட்கிழமை குடும்பத்தினருடன் குல்ஷன் வாசுதேவ் டின்னர் சாப்பிட வெளியில் சென்றுள்ளார். பின்னர், இரவு தன் குடும்பத்தினருடன் திரும்பிவந்துள்ளார். இவரது பூர்வீகம் டெல்லிதான். சில மாதங்களுக்கு முன்புதான் இந்தப்பகுதிக்கு குடிவந்துள்ளார். காந்தி நகரில் கார்மென்ட்ஸ் நடத்திவருகிறார். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்தவர் தன் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
காவலாளி சொன்ன தகவலையடுத்து அந்தக் குடியிருப்புக்கு விரைந்தோம். தரையில் ரத்த வெள்ளத்தில் குல்ஷன் அவரின் மனைவி மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் கிடந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். குல்ஷன் வாசுதேவ் வீடு 8-வது மாடியில் அமைந்துள்ளது. அங்கிருந்த பால்கனியிலிருந்துதான் மூவரும் குதித்துள்ளனர். அவர்கள் வசித்துவந்த 3 படுக்கையறை கொண்ட வீட்டுக்குள் சென்றபோது. குழந்தைகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். அந்த அறையிலிருந்து கத்தி மற்றும் கயிறு உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியுள்ளோம். வீட்டில் வளர்த்துவந்த முயல் இறந்து கிடந்தது. கொல்கத்தா செல்வதற்காக குல்ஷன் எடுத்து வைத்திருந்த ஃப்ளைட் டிக்கெட் இருந்தது. வீட்டில் விஷம் உள்ளிட்ட சில திரவங்களையும் கைப்பற்றியுள்ளோம்.

வீட்டின் சுவரில் இந்தியில் `நாங்கள் அனைவரும் ஒன்றாக தகனம் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் கடைசி விருப்பம்’ என கிறுக்கப்பட்டிருந்தது. தற்கொலைக் கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளோம். இறுதிச்சடங்குகளுக்காக ரூ.10,000 வைத்திருந்தனர். அந்தக் கடிதம் மூலம் நிதிநெருக்கடியே தற்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
குல்ஷன் உறவினரான ராகேஷ் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக இவரிடமிருந்து ரூ.5 கோடி அளவில் பணம் பெற்றுள்ளார். தன்னிடம் இருந்த சில தொகையையும் தன் நண்பர்களிடமும் கடன் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், ராகேஷ் பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவர் கொடுத்த செக் அனைத்து வங்கியிலிருந்து திரும்பிவந்துள்ளது. தன்னுடைய சொத்துகளை விற்று நண்பர்களிடம் வாங்கிய ஒரு கோடி ரூபாய் பணத்தை குல்ஷன் திருப்பிக் கொடுத்துள்ளார். வீட்டிலிருந்து பவுன்ஸ்-ஆன 9 செக்குகளையும் கைப்பற்றியுள்ளோம். அந்த கடிதத்தில் ராகேஷ் குறித்து குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் ராகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார்” என்றனர்.

தற்கொலை செய்வதற்குமுன் தன் நண்பரான ராஜேஷ் என்பவருக்கு கால் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய ராஜேஷ், ``அதிகாலை 3.38 மணிக்கு எனக்கு குல்ஷன் வீடியோ கால் செய்தார். சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்தார். தன் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டதாகக் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் உடலைக் காட்டினார். தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி போனை துண்டித்துவிட்டார். நான் தொடர்ந்து முயற்சி செய்தேன் லைன் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அவரின் சகோதரருக்கு தகவல் தெரிவித்தேன். மற்ற நண்பர்களுக்கு உடனே இதுகுறித்து கூறினேன். ஆனால், குல்ஷனை தொடர்புகொள்ள முடியவில்லை” என்றார்.