Published:Updated:

`கோர்ட் காதல்; ஜெயிலில் நீடித்த பாசம்!'- உ.பி போலீஸுக்கு `ஷாக்' கொடுத்த பெண் காவலர்

மலையரசு

உள்ளூர் தாதாவான ராகுல் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி சிறைவாசம் அனுபவித்து வந்தாலும் வெளியில் வந்த பிறகும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருமணக் கோலத்தில் பாயல்
திருமணக் கோலத்தில் பாயல்

காதல் கதைகள் பலவற்றைக் கேட்டிருப்போம்... பல படங்களில் பலவிதமான காதல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த காதல் கதை, போலீஸார் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதற்குக் காரணம், கொலைக் குற்றவாளி ஒருவர் வலைதளங்களில் பதிவிட்ட புகைப்படங்கள்தான்.

கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் பாயல், இவர் சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது அங்கு கொலை வழக்கு ஒன்றின் குற்றவாளியாக ஆஜரான ராகுல் தரசனா என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

ராகுல் தரசனா
ராகுல் தரசனா

உள்ளூர் தாதாவான ராகுல் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி சிறைவாசம் அனுபவித்துவந்தாலும் வெளியில் வந்து தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தப் பகுதியின் `மோஸ்ட் வான்டட்' குற்றவாளிகள் பட்டியலில் ராகுல் பெயர் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இதனால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏறிவந்துள்ளார்.

வியாபாரி கொலை வழக்கில் ஆஜராகும்போதுதான் பாயலைச் சந்தித்துள்ளார். பார்த்த நொடியில் இருவரும் காதல் வயப்பட ஜெயிலில் இருந்தபோதும், பெயிலில் வந்தபிறகும் ராகுல் உடன் தொடர்பில் இருந்துள்ளார் பாயல். இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்தாலும் வெளியில் யாருக்கும் இதுகுறித்த தகவல் தெரியவில்லை. இந்தநிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை ராகுல் வலைதளங்களில் பதிவிடவே, அது வைரலாகப் பரவியுள்ளது. இதைப் பார்த்ததும் அப்பகுதி போலீஸார் `ஷாக்' ஆகியுள்ளனர்.

திருமணம்
திருமணம்

`` இந்தத் திருமணம், வெளிப்படையாக மாநில காவல்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது' எனக் கருத்து தெரிவித்துள்ள போலீஸார் `திருமணம் நடந்தது உண்மையா? என்பது குறித்தும் ராகுல் செய்த குற்றங்களில் எதிலாவது பாயலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளோம். பாயல் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது" என்கின்றனர் அதிர்ச்சி விலகாமல்.