Published:Updated:

உத்தரப்பிரதேசம்: 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - தூக்கில் தொங்கவிடப்பட்ட கொடூரம்

பாலியல் வன்கொக்ஷுமை
பாலியல் வன்கொக்ஷுமை

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அங்கத் சிங், விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில், 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று, (14-05-2021) வெள்ளிக்கிழமை காலை அந்த மாநில போலீஸார் கொடுத்த தகவலின்படி, இந்த நிகழ்வு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியிலுள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுமி நேற்று (13-05-2021) வியழக்கிழமையன்று ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். நீண்ட நேரம் கடந்தும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தால், அச்சமடைந்த பெற்றோர் சிறுமியைத் தேடி ஆடு மேய்க்கும் இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, சற்றும் எதிர்பாராதபடி, அங்கிருந்த ஒரு மரத்தில், தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்த சிறுமியைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். பதறிப்போன அந்தச் சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மனதைப் பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வு குறித்து, சிறுமியின் தந்தை "யாரோ எனது மகளைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். அவளது உடல் முழுவம் காயப்படுத்தப்பட்டு கீறல்களோடு இருந்தன” என்று கூறியவர் மேலும், சிறுமியின் "பிறப்புறுப்பில் ரத்தக்கரை படிந்திருந்தது" என்றும் தெரிவித்தார்.

மேலும், “எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. கொலைக்கு முன்பு எங்களின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி அங்கத் சிங் , விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ், ஹத்ராஸ் என அடுத்தடுத்து பெண்கள் மீது, குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தநிலையில், தற்போது அமேதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு