
`என்னுடைய கணவர் காரணமே இன்றி என்னை அடிப்பார், அவருக்கு நான் திருமணம் தாண்டிய உறவில் இருப்பேன் என்று சந்தேகம்...’
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 24 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அந்த நபர், மனைவியின் பிறப்புறுப்பு பகுதியை அலுமினிய நூலால் தைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தன் மனைவி திருமணத்துக்குப் பிறகு வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகக்ஷ் சந்தேகித்து, தகாத வார்த்தைகளில் பேசியும், அடித்தும் துன்புறுத்திவந்திருக்கிறார். இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று, மனைவியின் கை கால்களையும் கயிற்றால் கட்டிவிட்டு அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பை அலுமினிய நூலால் தைத்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்தப் பெண்ணை அப்படியே விட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றார்.
பிறகு அந்தப் பெண்ணின் தாய் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்தப் பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கணவர் சில மணி நேரங்களில் கைதுசெய்யப்பட்டார்.

இது குறித்து மிலாக் நகர வட்டார அலுவலர் ஸ்ரீகாந்த் பிரஜாபதி தெரிவிக்கும்போது, ``அந்தப் பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர். அறுவடை வாகன ஓட்டுநரான இவர், அறுவடைக் காலங்களில் பணிக்குச் சென்றுவிடுவார். வீட்டிலிருந்த அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இது போன்ற செயலை செய்திருக்கிறார். அவர் இது குறித்துச் சிறிதும் குற்ற உணர்வு கொள்ளவில்லை.” என்றார்.
ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறும்போது,`` மருத்துவ அறிக்கையில், அந்தப் பெண்ணின் உடல் உறுப்புக்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றார்.
அந்தப் பெண்ணின் கணவர் குமாரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 326, 323, 498A, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், ``என்னுடைய கணவர் காரணமே இன்றி என்னை அடிப்பார். அவருக்கு நான் திருமணம் தாண்டிய உறவில் இருப்பேன் எனறு சந்தேகம்... இது போன்று அவர் நடந்துகொள்வார் என்று ஒருபோதும் நான் எதிர்பார்த்ததில்லை” என்றார்.