Published:Updated:

`காலில் விழுந்து கெஞ்சினார்; காதுகொடுத்து கேட்கல!'- மகன் கண்முன்னே தந்தையை அடித்துக்கொன்ற போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில், விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணம்
மரணம்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் டாமர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வந்தார். பிரதீப்பின் மனைவி ரஜினி. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். சம்பவத்தன்று, பிரதீப் தனது சகோதரனின் இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டதாகவும் அதைச் சரிசெய்யச் செல்வதாகவும் மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். தன்னுடன் மகனையும் அழைத்துச்சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் கணவர் மற்றும் மகன் திரும்பாததால், ரஜினி பதற்றமாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரதீப் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல் வந்துள்ளது.

கொலை
கொலை

ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக பிரதீப்பை காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். ப்ரீத்தி என்ற பெண், கடந்த ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அந்தப் பெண்ணின் கணவர் திகம்பரர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கித்தனர். திகம்பரின் சகோதரியைத்தான் பிரதீப் திருமணம் செய்துள்ளார். இந்தக் கொலையில் பிரதீப் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதிய காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அவர்களுடன் மகனும் சென்றுள்ளார். விசாரணையின்போது, திடீரென பிரதீப் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

பிரதீப்பின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால், போலீஸார் அடித்துத் துன்புறுத்தியிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து அவரது மகனிடம் விசாரித்தனர். சிறுவன் கூறியதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ‘போலீஸார் அப்பாவை கடுமையாகத் தாக்கினர். அவர்கள் காலில் விழுந்து கெஞ்சினார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்னை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்டார். அவர்கள் குடித்திருந்தார்கள். அப்பா சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கட்டை மற்றும் ஷூக்களால் அடித்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. ஒரு அறையில் வைத்து பூட்டினர். அதைக் கண்டு நான் அழதபோது என் கன்னத்தில் அறைந்தனர். துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டினர். அதன்பின், சிப்ஸ் பாக்கெட் வாங்கிக்கொடுத்து வெளியில் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது” என மிரட்டியதாகச் சிறுவன் கூறியுள்ளான்.

`காலில் விழுந்து கெஞ்சினார்; காதுகொடுத்து கேட்கல!'- மகன் கண்முன்னே தந்தையை அடித்துக்கொன்ற போலீஸ்

சிறுவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிரதீப் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துப் பேசிய அவரது உறவினர்கள், “பிரதீப்பை கொலை வழக்கில் சிக்கவைக்க காவல்துறையினர் முயன்றனர். கூலிப்படைக்கு பிரதீப் 1.5 லட்சம் கொடுத்ததாக போலீஸார் கூறுகிறார்கள். பிரதீப் மாதம் 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவந்தார். அவரிடம் இவ்வளவு பணம் இருக்க வாய்ப்பில்லை. பிரதீப்பை போலீஸார் சிஜார்சி காவல்நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்தனர். ரேஷன் பொருள்கள் வாங்கச் சென்ற பிரதீப்பின் இளைய சகோதரர் குல்தீப் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரும் பில்குவா காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். குல்தீப் மூலம் பிரதீப்பை அங்கு கட்டாயப்படுத்தி வரவழைத்தனர்'' என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

மூடநம்பிக்கைகளால் அழியும் அரிய கருமந்திகள்... நீலகிரி வனத்துறையின் கவனத்துக்கு!

இதுகுறித்துப் பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், “வழக்கு விசாரணைக்காக பிரதீப் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதன்பின், மீரட்டில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 7 நாள்களில் இதுதொடர்பான அறிக்கை வெளியாகும். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணங்கள் தெரியவரும். ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பிரதீப் மனைவி ரஜினி
பிரதீப் மனைவி ரஜினி

காவல்துறை அதிகாரிகளின் பதிலில் ரஜினிக்குத் திருப்தியில்லை. “என் கணவரின் உயிரை எடுத்தவர்கள்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். அவரது வருமானத்தை நம்பித்தான் எனது குடும்பம் இயங்கிவந்தது. இப்போது, எனது மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது” என ஆதங்கப்பட்டார்.