Published:Updated:

`மனைவியைக் கடத்திவிட்டார்கள்’ - புகார் கொடுத்த கணவருக்கு உ.பி காவலர்கள் கொடுத்த ட்ரீட்மென்ட்

மர்ம நபர்களிடம் இருந்து தப்பிய பெண், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார்.

காவல்துறையினர்
காவல்துறையினர்

உத்தரப்பிரதேச காவல்துறையினர், புகார் கொடுத்தவரை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொய்ப் புகார் அளிப்பதாக கூறி இரண்டு விரல்களை உடைத்துள்ளனர். சம்பவத்தன்று அந்த நபர், தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் அவரைத் தாக்கிவிட்டு அவரின் மனைவியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

கைது
கைது

அந்தப்பெண் பாதிவழியில் காரில் இருந்து குதித்து தப்பிவிட்டார். மர்ம நபர்கள் தாக்கியதில் மயக்கமடைந்த அந்த நபர் நினைவு திரும்பியதும், காவல்துறையின் அவசர எண் 100-க்கு டையல் செய்து புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாக கருதிய காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து தங்கள் பாணியில் கவனித்துள்ளார். பொய்ப் புகார் கூறுகிறாயா என்று கூறி தாக்கியுள்னர். மர்ம நபர்களிடமிருந்து தப்பிய பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். அங்கு தன் கணவருக்கு நேர்ந்ததைப் பார்த்துப் பதறியுள்ளார். காவல்துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

உ.பி. காவல்துறை
உ.பி. காவல்துறை

காவல்துறையினர் கவனித்த விதத்தில் அவரின் கணவர் நிலைகுலைந்துப்போனார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரின் கணவரை தாக்கிய காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.