Published:Updated:

`ஷாகீன் பாக்தான் குறி; ரூ.10,000' - ஜாமியா சம்பவத்தில் சிறுவனுக்கு துப்பாக்கி விற்ற இளைஞர்

அஜீத்
அஜீத்

கைதுசெய்யப்பட்டுள்ள அஜீத், உத்தரப்பிரதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, ஆசிரியர் பணியில் சேருவதற்காக பி.எட் படித்துவருகிறார்.

டெல்லி, ஜாமியா மிலியா போராட்டக்களத்தில், மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கடந்த ஜனவரி 30-ம் தேதி நுழைந்ததால், அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபர், `இதோ உங்கள் சுதந்திரம்’ என்று கத்தியபடி துப்பாக்கியால் சுட்டதில், போராட்டக்களத்திலிருந்த மாணவர் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜாமியா துப்பாக்கிச்சூடு
ஜாமியா துப்பாக்கிச்சூடு

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் 17 வயது சிறுவன் என்றும் உத்தரப் பிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றில் படித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், ``அந்தச் சிறுவனுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது?” என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், சிறுவனுக்கு துப்பாக்கியை விற்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாஜ்பூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர், அஜீத். 25 வயதான இவர், உத்தரப்பிரதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது, ஆசிரியர் பணியில் சேருவதற்காக பி.எட் படித்துவருகிறார். இவர், ஜூனியர் குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் என்றும் உ.பி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவனிடம், இவர்தான் நாட்டுத் துப்பாக்கியை விற்றிருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தில், காவல்துறையினர் இவரைக் கைதுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு? - மாணவர்கள் குற்றச்சாட்டும் காவல்துறை விளக்கமும்!

இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய விசாரணைக்குழு அதிகாரிகள், ``சிறுவனின் உறவினர் ஒருவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டோம். அதில், தனது உறவினர் திருமணத்தின்போது நடக்கும் கொண்டாட்டத்தில் பயன்படுத்த துப்பாக்கி வேண்டும் என்பதுபோன்ற காரணங்களைக் கூறி, துப்பாக்கி வாங்க உதவுமாறு கேட்டுள்ளார். அவர்தான், அஜீத்திடம் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். 10,000 ரூபாய்க்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை விற்றுள்ளார்” என்று கூறியுள்ளனர்.

அஜீத், அப்பகுதியிலுள்ள வேறொருவரிடமிருந்து துப்பாக்கி வாங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்த மற்றொரு நபரை அடையாளம் காண முடியவில்லை என்பதால், அதிகாரிகளை குழப்புவதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறுவன்
சிறுவன்

கைதுசெய்யப்பட்ட சிறுவன் காவல்துறை அதிகாரிகளிடம், ``ஷாகீன் பாக்கிற்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய திட்டம். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் என்னை ஜாமியா மிலியாவில் இறக்கிவிட்டார். ஷாகீன் பாக்கிற்கு சென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட வேண்டும், அதில் பலரது கவனத்தையும் பெற வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் கிளம்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

``கூட்டத்தினரால் கொலை செய்யப்படுவோம் என அஞ்சினார். கூட்டத்தில் இருந்த சிலர் அவரை நோக்கி முன் நகர்ந்ததும், பயத்தினால் சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்” என்றும் ``இந்து தலைவர்களின் கொலை மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் மற்றும் வீடியோக்களால் அவர் தீவிரம் அடைந்துள்ளார்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி காவல்துறை இணை ஆணையாளர் தியோ, ``அச்சிறுவன், 18 வயதிற்குக் குறைவானவரா என்பதைக் கண்டறிய `bone ossification’ பரிசோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்றுவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

`அடுப்படியிலிருந்து முதன்முறையா போராட்டத்துக்கு வந்திருக்கோம்!' - கொதிக்கும் ஷாஹீன் பாக் பெண்கள்
பின் செல்ல