Published:Updated:

வாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை! - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

வீடியோ காட்சி
வீடியோ காட்சி

``சுமார், 2 நிமிடங்களுக்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் அலறும் சத்தங்களுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. மேலும், சுடப்பட்டவர்களில் ஒருவர் தரையில் வீழ்ந்து இறந்து கிடப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன”

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரையும் அவரது மகனையும் வயல் பகுதியில் வைத்து இரண்டு பேர் சுட்டுக்கொல்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிலிருந்து 379 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சம்பால் என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Representational Image
Representational Image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் சம்பால் பகுதியில் உள்ள கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சிப் பிரமுகர் சோட் லால் திவாகர், அவரது மகன் சுனில் ஆகியோர் பணி நடைபெற்று வரும் அந்தச் சாலையை ஆய்வு செய்யச் சென்றுள்ளனர். அப்போது, வயல் பகுதி சாலையை ஆக்கிரமிப்பது தொடர்பாக வயல் உரிமையாளர்கள் இருவர் மற்றும் திவாகர் ஆகியோர் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வயலின் நடுவே இருந்த குறுகிய பாதையில் வைத்து இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனையடுத்து, வயல் உரிமையாளர்கள் இருவரும் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் மற்றும் அவரது மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சுட்டவர்களில் ஒருவரது பெயர் சவீந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

`தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்

வீடியோவில், துப்பாக்கி ஏந்தியபடி இருவர் மற்ற இருவருடனும் வாக்குவாதம் செய்வது, தகாத வார்த்தைகளால் பேசிக்கொள்வது, அச்சுறுத்துவது, ஒருவர் சமாதானம் செய்ய முயற்சி செய்வது மற்றும் அவர்களை துப்பாக்கியால் சுடுவது என அனைத்துக் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேலாக இந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் அலறும் சத்தங்களுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. மேலும், சுடப்பட்டவர்களில் ஒருவர் தரையில் வீழ்ந்து இறந்து கிடப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன. சுடப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி
துப்பாக்கி
மாதிரிப்படம்

அரசியல் பிரமுகர் திவாகரின் மனைவி சம்பால் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார். இதுதொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் விரைவில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ``துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் உள்ளூரில் அதிக பலம் வாய்ந்தவர். நாங்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை அழைத்து விசாரித்துள்ளோம். வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்” என மூத்த காவல்துறை அதிகாரி யமுனா பிரசாத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக திவாகர் இருந்தார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பெரோஸ்கான் கூறியுள்ளார். எனினும், கூட்டணிக் கட்சிக்கு அந்த இடம் சென்றதால் அவரால் போட்டியிட முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தப்பியோடிய இளைஞர்; தானாக வெடித்த துப்பாக்கி!  -துறையூர் வனக் காப்பாளருக்கு நேர்ந்த சோகம்
அடுத்த கட்டுரைக்கு