உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், 2-ம் வாய்ப்பாடு சொல்லத் தவறிய 5-ம் வகுப்பு மாணவனை, எலெக்ட்ரிக் டிரில் கொண்டு சித்ரவதை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கான்பூர் மாவட்டத்தின் பிரேம்நகரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவன் சிசாமா எனும் பகுதியில் வசிப்பவர். இந்தச் சம்பவம் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததையடுத்து, பள்ளிக்கு பெற்றோர் வர, பள்ளி வளாகம் பரபரப்பானது.

இந்த விவகாரம் போலீஸுக்குச் சென்றபோது அந்த மாணவன், ``ஆசிரியர் என்னை 2-ம் வாய்ப்பாடு கூறச் சொன்னார். நான் அதைக் கூறத் தவறியதால், ஆசிரியர் எலெக்ட்ரிக் டிரில் இயந்திரம் கொண்டு கையைக் காயப்படுத்தினார். உடனடியாகப் பக்கத்திலிருந்த மாணவன் எலெக்ட்ரிக் டிரில் இயந்திரத்தின் இணைப்பைத் துண்டித்துவிட்டான்" என போலீஸாரிடம் கூறியிருக்கிறான்.
இதில் அந்த மாணவனின் இடது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் முதலில் இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மாணவனின் குடும்பத்தாரின் சலசலப்புக்குப் பின்னரே கல்வி அதிகாரிகளுக்கு இது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதையடுத்து கான்பூர் நகரின் அடிப்படை சிக்ஷா அதிகாரி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் உட்பட சிலர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்துப் பேசிய அடிப்படை சிக்ஷா அதிகாரி சுஜித் குமார் சிங், ``இந்தச் சம்பவம் முழுவதையும் விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரேம் நகர் மற்றும் சாஸ்திரி நகர் தொகுதிக் கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புவார்கள். இதில் யாரேனும் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் தண்டனைக்குரிய நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்தார்.