Published:Updated:

பாலியல் வன்கொடுமை; நீதி கிடைக்காத விரக்தி! - விபரீத முடிவெடுத்த உ.பி இளம்பெண்

Representational Image
Representational Image

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தில் தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஓர் இளம் பெண் கிராம பஞ்சாயத்தில் தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடப்பது உத்தரப்பிரேதசம் மாநிலத்தில்தான். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் அடிப்படையில் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக உத்தரப்பிரேதசம் இருக்கிறது.

Representational Image
Representational Image
பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமாகிறதா உத்தரப்பிரதேசம்?

உத்தரப்பிரேதசம் மாநிலத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு சமீபத்திய உதாரணம் உன்னாவ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு. அதேபோல் அதே உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இரண்டு பேர் சேர்ந்து வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையம் வருத்தம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தப் பெண் நீதி வேண்டி ஊர் பஞ்சாயத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்தவர்களை பஞ்சாயத்தினர் எச்சரித்து மட்டுமே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை ஊர் பஞ்சாயத்து தண்டிக்காத விரக்தியில் வீட்டுக்குச் சென்ற அந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் முன்னதாக பஞ்சாயத்தில் முன் வைத்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு அலிகார் காவல்துறையினர் இளம் பெண்ணை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இளைஞர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Representational Image
Representational Image

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அலிகார் காவல் கண்காணிப்பாளர் முனிராஜ், ``தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சகோதரி அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்திருக்கிறோம். அதேபோல் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். பரிசோதனையின் முடிவுகளை வைத்தே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி பஞ்சாயத்தில் முறையாக விசாரிக்காமல் போனதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். எனவே, அந்தப் பெண்ணின் குற்றசாட்டை விசாரித்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம். பெண்ணின் மரணத்துக்கு அவர்களின் அலட்சியமே காரணம் என்பது தெரியவந்தால் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு