Published:Updated:

நிர்பயா சம்பவத்தைப் போன்ற கொடூரம் - உ.பி-யில் 50 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 2019-ம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கின்றன என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்திருந்தது. என்.சி.ஆர்.பி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றும், இது முந்தைய ஆண்டைவிட 22 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்.சி.ஆர்.பி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஹத்ராஸ் பட்டியலினப் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் தொடங்கி மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் வரை உ.பி-யில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன.

இந்த வரிசையில் ஒரு கொடூரச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது அரங்கேறியிருக்கிறது. அம்மாநிலத்தின், பதௌன் (Baudaun) மாவட்டத்திலுள்ள உகைட்டி (Ughaiti) பகுதியில் 50 வயதான பெண் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். நிர்பயா சம்பவத்தைப் போன்று, கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட 50 வயதான பெண், உத்தரப்பிரதேச மாநிலம் பதௌன் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். கடந்த ஜனவரி 3-ம் தேதி மாலை பிரார்த்தனை செய்ய கோயிலுக்குச் சென்ற அந்தப் பெண்ணை, சடலமாக வீட்டுக்குத் தூக்கி வந்திருக்கிறார்கள்.

கொலை
கொலை

தனது தாய் மரணம் தொடர்பாக அந்தப் பெண்ணின் மகன், கோயில் பூசாரியும், அவருடன் வந்த இரண்டு நபர்களும் தாயின் உடலைக் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டு, அவர்களிடம் விசாரிப்பதற்கு முன்பே கிளம்பிவிட்டதாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.

கோயில் பூசாரியோ, ``அந்தப் பெண் கிணற்றில் விழுந்துவிட்டார். உதவிக்காக அவரது அழுகுரலைக் கேட்டதும், இரண்டு நபர்களுடன் கிணற்றை நோக்கிச் சென்று தேடினோம். அங்கு அந்தப் பெண் இறந்துகிடந்தார். அவருடைய உறவினர்கள் அலைபேசி எண்கள் எதுவும் என்னிடம் இல்லை. அதனால் அந்தப் பெண்ணின் உடலை வீட்டுக்குக் கொண்டுவந்தோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பூசாரி சொன்ன கதையை நம்பாத பெண்ணின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியதுடன், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பூசாரி மீது புகார் கூறினர். இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதித்துவருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவரின் பெண்ணுறுப்புகளில் காயங்கள் இருப்பதும், அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பாலியல் கொடூரம்..
பாலியல் கொடூரம்..

உடனடியாக, பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸார், இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதியப்பட்டிருப்பதாகக் கூறினர். இது குறித்து[ பேசிய பதய்ன் மாவட்ட காவல்துறை எஸ்.எஸ்.பி சங்கல்ப் சர்மா (Sankalp Sharma), ``குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார். இது தொடர்பாக கோயில் பூசாரி உட்பட இருவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு