Published:Updated:

பாதியில் நின்ற இசை; தாடையில் பாய்ந்த குண்டு! -உ.பி திருமண விழாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் இளம்பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடனமாடிய பெண்
நடனமாடிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனால் அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளதாக அங்குள்ள எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அம்மாநில அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரமே இன்னும் ஓயாத நிலையில் மேலும் அங்கு ஒரு பெண் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியாகி, பொதுமக்களைக் கொதிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகோட் பகுதியைச் சேர்ந்த கிராமத் தலைவர் சுதிர் சிங் என்பவரின் மகள் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. விமரிசையாக நடத்தப்பட்ட அந்தத் திருமணத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. அங்கு நடனமாடிய பெண் ஒருவர் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவின் தொடக்கத்தில், `இரண்டு பெண்கள் மேடையில் நின்று நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். இடையிடையில் அவர்கள் நடனமாடுவது மெதுவாகக் குறைகிறது.

மேடைக்கு அருகில் குடிபோதையிலிருந்த ஒரு நபர் நடனமாடும் பெண்ணை நோக்கி, ‘நீ ஆடுவதை நிறுத்தினால் சுட்டுவிடுவேன்’ எனத் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு சத்தம் போடுகிறார். அடுத்த சில விநாடிகளில் பாட்டுச் சத்தம் நிற்கிறது. அந்தப் பெண்ணும் நடனத்தை நிறுத்துகிறார்.

அப்போது, ‘அவள் நிறுத்திவிட்டாள்.. இனி நீ துப்பாக்கிச்சூடு நடத்தலாம்’ என்ற குரல் கேட்டு முடிக்கும் முன்பே, அந்தப் பெண்ணின் முகத்தில் குண்டு பாய்ந்து அதே மேடையில் சரிந்து விழுகிறார். இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர்.

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் பெயர் ஹினா (22) என்பது தெரியவந்துள்ளது. முகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தற்போது கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கியால் சுட்டவர் மற்றும் அவரைத் தூண்டியவர் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்கள் இருவரும் கிராமத் தலைவரின் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹினா
ஹினா

சம்பவம் நடந்தபோது ஹினாவுக்கு அருகில் நடமாடிக்கொண்டிருந்த நைனா என்ற பெண் இது பற்றிக் கூறும்போது, “ நாங்கள் இருவரும் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென இசை நின்றுவிட்டது. அதனால் நாங்களும் ஆடுவதை நிறுத்தினோம். அதற்குள் ஒரு நபர் ஹினாவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டார். ஹினா எனக்கு அருகில்தான் நின்றிருந்தாள் அவளது தாடைப் பகுதியில் குண்டு பாய்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் பற்றிப் பேசிய காவல்துறையினர், ``திருமண நிகழ்ச்சியில் மதுபோதையிலிருந்த ஒருவர் நடனமாடிய பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் அந்தப் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஊர்த் தலைவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தப்பித்துச் சென்ற இருவரையும் தேடிப் பிடித்து பாதிக்கப்பட்டவருக்குச் சட்டரீதியாக நீதி வாங்கித் தருவதற்கு எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.