Published:Updated:

`உண்மையைக் கூறிய குழந்தைகள்; சர்ச்சையில் என்கவுன்டர் டீம்?'- தாதா மணிகண்டன் வழக்கில் திருப்பம்

மாஜிஸ்திரேட் விசாரணையில் மணிகண்டனின் குழந்தைகள் கூறிய பதிலையடுத்து என்கவுன்டர் போலீஸ் டீமிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

manikandan
manikandan

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி குயிலாப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தாதா மணிகண்டன் (39) இவர்மீது ஆரோவில், கோட்டக்குப்பம், திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசுதல், கொலை மிரட்டல், கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆரோவில் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மணிகண்டனை விழுப்புரம் மாவட்ட போலீஸார் தேடிவந்தனர்.

manikandan home
manikandan home

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிகண்டன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குவந்த போலீஸாருக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து மணிகண்டன் இறந்தார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த போலீஸாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மணிகண்டன் என்கவுன்டர் குறித்து அம்பத்தூர் மாஜிஸ்திரேட் தனஞ்செழியன், சம்பவம் நடந்த வீடு, என்கவுன்டர் போலீஸ் டீம், அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் என பலரிடம் விசாரணை நடத்திவருகிறார். என்கவுன்டர் நடந்த வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருள்களும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ரிப்போர்ட்டுக்காகவும் விசாரணைக் குழு காத்திருக்கிறது.

manikandan
manikandan

விசாரணையின்போது மணிகண்டன் தங்கியிருந்த வீட்டிலிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், வெடி மருந்துகள், கத்தி, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. குடியிருப்பு நிறைந்த பகுதியில் என்கவுன்டர் நடந்துள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது அந்த அடுக்குமாடி.

தாதா மணிகண்டனின் என்கவுன்டரில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மாஜிஸ்திரேட் தனஞ்செழியனிடம் மணிகண்டன் தரப்பு சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணைக்குப்பிறகு மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நடைபெற உள்ளது.

magistrate enquiry
magistrate enquiry

மணிகண்டனின் தம்பி மனைவிதான் பிலோமினா. இவருக்கு மூன்று குழந்தைகள். பிலோமினாவின் அடையாள அட்டையில் கணவர் என்று குறிப்பிடும் இடத்தில் மணிகண்டனின் பெயர் உள்ளது. என்கவுன்டர் நடந்தபோது வீட்டில் இருந்தவர்களிடம் மாஜிஸ்திரேட் தனஞ்செழியன் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளார்.

குறிப்பாக குழந்தைகளிடம் விசாரித்துள்ளார். அப்போது மூன்று குழந்தைகளும் ஒரே பதிலை தெரிவித்துள்ளனர். அதில் என்கவுன்டர் போலீஸ் டீம் நடந்துகொண்ட விதத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், என்கவுன்டர் எப்படி நடந்தது என்பதையும் அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் காயமடைந்த போலீஸாரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு என்கவுன்டர் போலீஸ் டீம் அளித்த விளக்கத்தையும் மாஜிஸ்திரேட் தனஞ்செழியன் பதிவு செய்தார்.

police
police

மணிகண்டனுக்கும் போலீஸாருக்கும் நடந்த மோதலில் மூன்று குண்டுகள் அவரின் நெஞ்சுப் பகுதியில் பாய்ந்துள்ளன. இதனால்தான் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உடலில் எவ்வளவு ஆழத்துக்கு குண்டு பாய்ந்திருந்தது போன்ற விவரங்களையும் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையில், மணிகண்டன் என்கவுன்டரில் இறந்தநிலையில் பிலோமினா, குழந்தைகளின் ஆறுதலுக்காக உருக்கமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதையும் விசாரணையின்போது மாஜிஸ்திரேட்டிடம் குழந்தைகள் கூறியுள்ளனர்.

மணிகண்டன் என்கவுன்டரில் உள்ள மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.