அமெரிக்காவில் நேற்று முன்தினம் மைக்கேல் ஹைட்(42) என்பவர், தன்னுடைய மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரத்தில் மனைவி, மனைவியின் தாயார், தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உட்டா (Utah) மாகாணத்தின் ஏனோக் (Enoch) நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் எட்டு பேர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துசென்றனர். சம்பவம் நடந்த வீட்டை போலீஸார் பார்த்தபோது, வேறு யாரோ அவர்களைச் சுட்டுக்கொன்றிருக்கலாம் என முதலில் சந்தேகப்பட்டிருக்கின்றனர்.
பிறகு போலீஸ் விசாரணையில், டிசம்பர் 21-ம் தேதியன்று மைக்கேல் ஹைட்டின் மனைவி, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த விசாரணையில், மைக்கேல் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் தன் முடிவை மாற்ற முன்வராததால், மைக்கேல் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் நடந்த இரவன்று, மைக்கேல் தன்னுடைய மனைவி, மனைவியின் தாயார், தன்னுடைய குழந்தைகளான மூன்று சிறுமிகள், இரண்டு சிறுவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். அதன் பிறகு இறுதியில் மைக்கேல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.