Published:Updated:

`உன்னாவ் பெண்ணைவிட மோசமான நிலை ஏற்படும்!'- உ.பியை அதிரவைத்த போஸ்டர்

வாக்குமூலம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி மிரட்டல் விடுத்துள்ளார்கள்..

representational image
representational image

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண், கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். ரேபரேலி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக அந்தப் பெண், ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த குற்றவாளி உட்பட 5 பேர் கொண்ட கும்பல் எரித்துக் கொன்றுள்ளனர். இந்தச் சுவடு மறைவதற்குள், இன்னொரு பெண்ணுக்கு மிரட்டல் எழுந்துள்ளது.

உன்னாவ் பெண் எரிப்பு
உன்னாவ் பெண் எரிப்பு

டெல்லி முகர்ஜி நகரைச் சேர்ந்த இளம்பெண். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் அருகே உள்ள கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்த சோஹ்ரான் சிங் என்பவர் அந்தப்பெண்ணைக் கடந்தவருடம் தனது நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்குவைத்து கூல்ட்ரிங்ஸில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்துக்கொண்டதுடன் அதை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் சோஹ்ரான் சிங். இந்தச் சம்பவம் தொடர்பாக இளம்பெண் போலீஸில் புகார் கொடுக்கவே, சோஹ்ரான் சிங்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

``வாழ விரும்புகிறேன்; உயிரோடு இருப்பேனா?"- மருத்துவர்களிடம் கதறிய உன்னாவ் இளம்பெண்

இதற்கிடையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சோஹ்ரான் சிங் இளம்பெண்ணின் வீட்டுச் சுவரில், ``உன்னாவ் பெண்ணைவிட மோசமாக இருக்கும். உனக்கும் அதே கதிதான்" என்று போஸ்டர் அடித்து ஒட்டி மிரட்டல் விடுத்துள்ளார். டெல்லியில் தனது தந்தையுடன் தங்கியிருந்த இளம்பெண் நேற்று கிராமத்துக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் சம்பந்தப்பட்ட இளம்பெண் தனது வாக்குமூலத்தை நீதிபதியைச் சந்தித்து அளிக்கவுள்ளார்.

மிரட்டல் போஸ்டர்
மிரட்டல் போஸ்டர்

அவர் வாக்குமூலம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி மிரட்டல் விடுத்துள்ளார்கள் என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். போலீஸில் புகார் அளித்த பிறகு அவரது வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாகப் பேசிய அப்பகுதி போலீஸார், ``நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளோம். மேலும், புகாரைப் பெற்ற பின்னர் பெண்ணுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறோம். பெண்ணின் பாதுகாப்பில் இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.

``தொட மட்டும்தானே செஞ்சாங்க... பெருசா எதுனா நடந்தா வா!'' - உன்னாவ் போலீஸ் அராஜகங்கள்