Published:Updated:

காதல் விவகாரத்தில் தீ வைத்து இளைஞர் கொலை!- அதிர்ச்சியில் தாய் மரணம்

உத்தரப்பிரதேசத்தில், காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

உத்தரப்பிரதேச மாநிலம் படேசா பகுதியைச் சேர்ந்த இளைஞர், மோனு. இவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 6 வருடங்களாகக் காதலித்துவந்துள்ளனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த மோனுவைக் காதலித்தால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மோனுவின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

death
death

தாயின் மருத்துவச் செலவுக்கு ரூ.25,000 தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து, சனிக்கிழமை தனது கிராமத்துக்குச் சென்ற மோனு, மருத்துவச் செலவுக்கான தொகையை ஏற்பாடுசெய்துள்ளார். மோனுவின் குடும்பத்தினர், மருத்துவமனையில் இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மோனுவை தீர்த்துக்கட்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, தனியாக இருந்த மோனுவை வீட்டிற்குள் வைத்து பூட்டி, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலினால் அவர் நிலைக்குலைந்து போனார். அவர்மீது பெட்ரோல் ஊற்றிய கும்பல், தீ வைத்துக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

மோனுவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், மோனுவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மோனுவுக்கு நடந்தது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தாயின் மருத்துவச் செலவுக்காக அவர் வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்தையும் அந்தக் கும்பல் எடுத்துச்சென்றுவிட்டது. இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ambulance
ambulance

மோனுவின் உடல்நிலை மோசமானதையடுத்து, அவரை லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்ட மருத்துவமனையிலிருந்து லக்னோவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே அவரது உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, 5 பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதல் விவகாரத்தில் மகன் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட மோனுவின் தாயும் அதிர்ச்சியில் மரணமடைந்தார். இது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோனு மற்றும் அவரது தாயின் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மோனுவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மோனுவுக்கு தீ வைத்த நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.