Published:Updated:

பா.ஜ.க எம்.எல்.ஏ மீது புகார் கூறிய மகள்! - துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தம்பதி

சத்யா கோபாலன்

ஜூலை 4-ம் தேதி சாக்‌ஷிக்கும் அஜிதேஷுக்கும் அங்குள்ள ராமர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

எம்.எல்.ஏ மகள்
எம்.எல்.ஏ மகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா, கடந்த சில நாள்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த மித்ரா அஜிதேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

எம்.எல்.ஏ மகள்
எம்.எல்.ஏ மகள்

தன் தந்தை மற்றும் சகோதரர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவலர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பேசி ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் சாக்‌ஷி. இவர் வெளியிட்ட வீடியோதான் அந்த மாநிலத்தில் கடந்த வாரம் முழுவதும் ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டது.

அவர் வெளியிட்ட வீடியோவில், `மரியாதைக்குரிய எம்.எல்.ஏ-ஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி (சாக்‌ஷியின் சகோதரர்கள்) தயவுசெய்து என்னை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவிடுங்கள். வருங்காலத்தில் எனக்கோ, அபி மற்றும் அவரின் உறவினர்களுக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு என் தந்தை மற்றும் சகோதரர்களே காரணம்” எனக் கூறியிருந்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ
பா.ஜ.க எம்.எல்.ஏ
ANI

இதற்கிடையில் இந்த வீடியோவுக்கு விளக்கமளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா, “என் மகள் மேஜர். அவளுக்கு முடிவெடுக்கும் உரிமை உள்ளது. எங்கள் குடும்பம் மற்றும் என்னைச் சார்ந்த யாரும் அவளை மிரட்டவில்லை. என் மகளுக்குத் தீங்கு விளைவிப்பதை என்னால் நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை.அவர்கள் இருவரும் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனப் பேசியிருந்தார்.

‘என்னால் ஒளிந்துகொள்ள முடியவில்லை; விட்டுவிடுங்கள் அப்பா’ - பா.ஜ.க எம்.எல்.ஏ மகள் கண்ணீர் வீடியோ

இந்நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் இந்தத் தம்பதி மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. இதற்காகக் காலை 8 மணிக்குத் தம்பதி நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். சரியாக 8.30 மணிக்கு காரில் வந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சாக்‌ஷி மற்றும் அவரின் கணவரைக் கடத்திச் சென்றுள்ளனர். நீதிமன்ற வாசலிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றம்
அலகாபாத் நீதிமன்றம்
Wikipedia

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, “தம்பதி இருவரும் நீதிமன்றத்தின் மூன்றாவது கேட் அருகில் நின்றிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர்களுக்கு அருகில் கறுப்பு நிற எஸ்.யு.வி (SUV) கார் மிகவும் வேகமாக வந்து நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் அதிலிருந்து இறங்கிய சிலர் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர்” எனக் கூறியுள்ளனர்.

மர்ம நபர்கள் வந்த கார் உ.பி 80 என்ற எண்ணுடன் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த எண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் பதிவு எண். மேலும், அந்தக் காரில் ‘தலைவர் (Chairman)’ என எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.