Published:Updated:

முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் - கடன் வாங்கியவர் கைவரிசைக் காட்டிய பின்னணி!

கொள்ளை

வடபழனி நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் - கடன் வாங்கியவர் கைவரிசைக் காட்டிய பின்னணி!

வடபழனி நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

Published:Updated:
கொள்ளை

சென்னை வடபழனி, மன்னர் முதலி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் HOCEANIC CAPITAL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை வடபழனி மன்னர் முதலி தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தீபக் என்பவர் உள்ளார். இந்த நிதி நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. நிதி நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து தினமும் வசூல் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

நிதி நிறுவனம்
நிதி நிறுவனம்

இந்த நிலையில், கடந்த16.8.2022-ம் தேதி பிற்பகலில் நிதி நிறுவன அலுவலகத்தில் தீபக், கேஷியர் நவீன் ஆகியோர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏழு பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி நிதி நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்த தீபக், நவீன் ஆகியோரைக் கத்தி முனையில் மிரட்டி அறையில் கட்டிப்போட்டனர். அப்போது தீபக் எதிர்த்து போராடியபோது அவரின் இடது தோள்பட்டையில் கத்தியால் கொள்ளையர்கள் வெட்டினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்பிறகு நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 6,93,745 ரூபாயை கொள்ளையடித்து விட்டு முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தீீபக், நவீன் ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டனர். காயமடைந்த தீபக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து சரவணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வடபழனி காவல் நிலையம்
வடபழனி காவல் நிலையம்

இதையடுத்து அவர், வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அவனிடம் விசாரித்தபோது அவன் பெயர் முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்றும், கல்லூரி மாணவன் என்றும் தெரியவந்தது. மேலும் முகமது, வடபழனி ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவன். அவனிடம் விசாரித்தபோது மொட்டை என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தான். இதையடுத்து முகமதிடமிருந்து 3,000 ரூபாய், கத்தி, பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முகமது அளித்த தகவலின்படியும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் அடிப்படையிலும் தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட கல்லூரி மாணவன் முகமதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். அவன் அளித்த தகவலின்படி விசாரணை நடந்துவருகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களில் ஒருவன், அதே நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருக்கிறான். வாடிக்கையாளரான அவன், அடிக்கடி அந்த நிறுவனத்துக்குச் சென்றபோது அங்கு கட்டுக்கட்டாகப் பணம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறான். இந்தத் தகவலை தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறான். அதன்பிறகுதான் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் வசூலுக்கு சென்றுவிடுவதால் அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே பணியாற்றுவர்கள். அதையெல்லாம் சில நாள்களாக நோட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பணம்
பணம்

கொள்ளையர்களில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள். மற்றவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றும் பட்டதாரிகள் எனத் தகவல் கிடைத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் பப்களுக்குச் சென்று போதையில் சந்தோஷமாக பொழுதை கழிப்பதுண்டு. அதற்குப் பணம் தேவைப்பட்டதால் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. விரைவில் கொள்ளைக் கும்பலைக் கைதுசெய்து பணம் மீட்கப்படும்."

கடந்த 13-ம் தேதி அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள கோல்டு அடகு வைக்கும் நிறுவனத்தில் 31.7 கிலோ தங்க நகைகள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் முருகன், அவன் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டு 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் வடபழனியில் இன்னொரு கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.