Published:Updated:

`என் பேச்சை மீறி செயல்படுவியா?' - சொத்துத் தகராறில் கணவனை எரித்துக் கொன்ற மனைவி

பி.ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டத்தில் சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த கணவரை மனைவியே மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

Maria leela
Maria leela

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர், பாக்கியராஜ். 59 வயது நிரம்பிய அவர் சொந்த ஊரில் விவசாயப் பணிகளைச் செய்துவந்துள்ளார். அவரின் மனைவி மரியலீலா. இவர்களுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்துவருகின்றனர். வெளிநாட்டில் வேலை செய்த மகன்களின் உழைப்பில் பாக்கியராஜ், பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடத்திவைத்துள்ளார்.

Arokia raj
Arokia raj

இந்த நிலையில், தனது சொத்துகள் அனைத்தும் மகன்களின் உழைப்பில் வாங்கப்பட்டவை என்பதால், அவற்றை மகன்களின் பெயரிலேயே உயில் எழுதி வைத்திருக்கிறார். அவரது இந்தச் செயலுக்கு மனைவி மரியலீலா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். சொத்துகள் அனைத்தையும் மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கும் பிரித்துக் கொடுக்க வெண்டுமென மரியலீலா வலியுறுத்தியதை பாக்கியராஜ் ஏற்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் வாய்த்தகராறு உருவாகியிருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மகன்களுக்கு எழுதி வைத்த நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்திருக்கிறது. அதற்கு அவரின் மனைவி மரியலீலா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரது எதிர்ப்பையும் மீறி, நிலத்தை மகன்களுக்கு அளந்து கொடுத்திருக்கிறார், பாக்கியராஜ். இது மரியலீலாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. தனது சொல்லை மீறி கணவர் செயல்பட்டதை எண்ணிக் கோபமடைந்துள்ளார்.

Arokia raj
Arokia raj

இந்த நிலையில், வீட்டில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாக்கியராஜைப் பார்த்தபோது மரியலீலாவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மரியலீலாவை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். சொத்துக்காக கணவனை மனைவியே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.