Published:Updated:

`5 நிமிட அவகாசம்; தூக்க மாத்திரை மிரட்டல்!' - தி.மு.க நிர்வாகி மீது அதிர்ச்சிப் புகார் கொடுத்த மனைவி

சாரதி குமார்
சாரதி குமார்

`திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளர் சாரதி குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து தன்னைத் துன்புறுத்துவதாக' அவரது மனைவி சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ரம்யா இளவரசனுக்கும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளர் சாரதி குமாருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதுகுறித்து கேள்வி கேட்டதால் தன்னைக் கொலை செய்துவிடுவதாக தனது கணவர் மிரட்டுவதாகவும், தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னிடமிருந்த நகை சொத்து உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டதாகவும் ரம்யா சென்னைப் பெருநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சாரதி குமார், ரம்யா
சாரதி குமார், ரம்யா

அந்தப்புகாரில், ``எனக்கும் வாணியம்பாடியைச் சேர்ந்த சாரதி குமாருக்கும் 2016 பிப்ரவரி 10-ம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என் கணவருக்கும் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானேன். திருமணமாகி குழந்தை உண்டான பிறகுதான் எனக்கு இந்த விஷயமே தெரியவந்தது. இதையடுத்து எங்களுக்குள் சண்டை வந்தது. குடும்ப மரியாதையைக் கருத்தில்கொண்டு நான் காவல்நிலையத்தில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

அவரது பழக்கம் குறித்து எனக்குத் தெரிந்துவிட்டதால் தினமும் குடித்துவிட்டு என்னிடம் வந்து சண்டைபோடுவார். குழந்தை பிறந்தால் அவர் மாறிவிடுவார் என எண்ணி அவரது கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு நான் அமைதியாக இருந்தேன். அந்தப் பெண்ணின் சகோதரர் காவல்துறையில் உயர்பொறுப்பில் இருக்கிறார். `உங்கள் தங்கையால் என் வாழ்க்கையே போய்விட்டது' என அவரிடம் முறையிட்டேன். அவரோ, `நான் இருவரையும் கண்டித்துவிட்டேன். அவர்கள் திருந்தவில்லை. நீங்கள் சட்டரீதியிலான நடவடிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள்' எனக் கூறினார்.

சாரதி குமார்
சாரதி குமார்

அந்தப்பெண்ணுக்குத் திருமணமாகி கணவர் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவரை விடவும் வயது மூத்தவர். நான் அமைதியாக இருப்பதை இருவரும் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர் என் வீட்டுக்கே வரத் தொடங்கிவிட்டார். தோழியின் பேச்சைக் கேட்டு என்னுடைய நகைகள் சுமார் 140 பவுனை அடகு வைத்துப் பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டார். தோழியின் பேச்சைக் கேட்டு, என் தந்தை பெயரில் இருந்த சொத்து மற்றும் 20 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மிரட்டி வாங்கிக்கொண்டார். மேலும், அந்தப் பெண்ணுக்குத் தவறான பெண்களுடன் பழக்கம் உள்ளது. என் கணவர் விரும்பும் போதெல்லாம் பல பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்லக்கூட என்னை அனுமதிக்கவில்லை. கணவரின் தோழியின் சொந்த ஊரான சேலத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். எனக்கு சேலத்தில்தான் குழந்தை பிறந்தது. மருத்துவமனைச் செலவுகளை என் தந்தை பார்த்துக்கொண்டார். குழந்தை பிறந்த இரண்டு நாள்களில் வாணியம்பாடி வந்துவிட்டோம். சண்டை தொடர்ந்ததையடுத்து நான், என் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். என் கணவர் அவரது தோழியின் அக்கா மகளுடன் குடும்பம் நடத்துவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். மாமியாரின் சம்மதத்துடன் மூவரும் அங்கு வாழ்ந்து வந்தனர்.

சாரதி குமார்
சாரதி குமார்

நால்வரும் ஒன்றாகக் குடும்பம் நடத்த வேண்டும்; ஒரே அறையில் இருக்க வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்தினர். இதற்கு என் மாமியாரும் உடந்தை. `அரசியல்வாதின்னா இதுஎல்லாம் சகஜம், நீதான் பொறுத்துப்போக வேண்டும்' என்றார் என் மாமியார். தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை செய்துகொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால் என் மகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். என் மகளின் உயிரைக் காப்பாற்ற நான் தூக்க மாத்திரைகளை விழுங்கினேன். என் மரணத்தால் அவருக்கு பாதிப்பு வந்துவிடுமோ என எண்ணி மருத்துவமனையில் சேர்த்து என்னைப் பிழைக்க வைத்தனர். அதன்பின்னர், நான் என் தாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் காவல்துறையில் புகார் அளிப்பேன் எனப் பயந்து என் தந்தையை மிரட்டினர். அதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் உள்ளது.

என்னுடைய சொத்து மற்றும் நகைகளைக் கேட்டபோது, `விவாகரத்து செய்துவிடுவேன்' என மிரட்டினர். திடீரென ஒருநாள் என் கணவரின் சகோதரர் சிவா சில ரவுடிகளுடன் வீட்டுக்கு வந்து மிரட்டினார். என் தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள். நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். கணவரின் தோழி, தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலம் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து நான் சென்னையில் வந்து தங்கிவிட்டேன். `நான் தி.மு.கவில் நகரச் செயலாளராக இருக்கிறேன். என் அதிகாரத்தைப் பயன்படுத்தி 5 நிமிடத்தில் உன்னைக் கொலை செய்துவிடுவேன்' என கணவர் என்னை மிரட்டினார்.

ரம்யா
ரம்யா

இதையடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட்டேன். `நீ ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை' என்றார். புகார் அளித்திருப்பதாகக் கூறினேன். `சரி நான் நடவடிக்கை எடுக்கிறேன்' என்று கூறி என்னை அனுப்பிவைத்தார். அறிவாலயத்தில் இருந்த என் கணவர், `இங்கு வந்து என்னை அவமானப்படுத்துகிறாயா?' என ஆத்திரப்பட்டார். `நான் கட்டிய தாலியை ஏன் கழுத்தில் போட்டிருக்கே?' என்று கூறி நான் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை அறுத்துச் சென்றார். என் அப்பா வந்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு தன்னிடமிருந்து மிரட்டி பறித்துக்கொண்ட சொத்து பணம் நகைகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அந்தப்புகாரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

ரம்யாவின் புகாரையடுத்து அவரது கணவரும் வாணியம்பாடி தி.மு.க நகரச் செயலாளருமான் சாரதி குமாரைத் தொடர்புகொண்டோம். இந்தப் புகாருக்கு விளக்கமளிக்க தாயாராக இருந்தார். ``அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தப் புகாரை அவர் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை நீங்கள் படித்துப்பார்த்தாலே அவர் கூறுவதில் உண்மை இல்லை என்பது தெளிவாகத் தெரியும். `இவ்வளவு கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தேன்' என அவர் கூறுவது எல்லாம் கட்டுக்கதை. அவர் கூறுவது போல் யாராவது நடந்து கொள்வார்களா?

சாரதி குமார், ரம்யா
சாரதி குமார், ரம்யா

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கிறது . கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தப் புகாரில் என்ன சொன்னார்களோ அதையே நீதிமன்றத்திலும் கூறினர். அவர்கள் கூறிய அனைத்துப் புகாரும் தவறானது என நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டோம். எனக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வரவுள்ளது.

`கந்துவட்டி கொடுமை.. நின்றுபோன காதல் திருமணம்’- அவமானத்தால் தற்கொலை செய்த பெற்றோர்; மகன் கவலைக்கிடம்

அதற்குள் என்னிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார். `அறிவாலயத்தில் வைத்து அடித்தேன்'னு புகார் கூறியுள்ளார். கழகத்தில் நான் நல்ல பொறுப்பில் இருக்கிறேன். அங்கு தளபதி இருப்பார். எம்.எல்.ஏக்கள், கழகத் தொண்டர்கள் என இருப்பார்கள். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நான் ஏன் அப்படிச் செய்யப்போகிறேன்? இது அரசியல் காழ்ப்புணர்ச்சி; வேறு ஒன்றும் இல்லை. அவங்க கொடுத்த புகாரிலேயே மாநில இலக்கிய அணிச் செயலாளர் இந்திரகுமாரி அம்மா மூலமாகத்தான் அறிவாலயம் சென்றேன் எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே தெரியவில்லையா அரசியல் நோக்கம்தான் பிரதான காரணம் என்று.

சாரதி குமார்
சாரதி குமார்

வழக்கறிஞர் திலகவதி மூலமாக ஒரு செட்டில்மென்ட் பேசுனாங்க. அவங்க கோடிக் கணக்குல டிமாண்ட் வெச்சாங்க அதற்கு உடன்படவில்லை என்பதால் இந்தப் புகாரைக் கொடுத்திருக்கிறார். இதே வாணியம்பாடியில்தான் அவர்களது உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நான் கொடுமைப்படுத்தியிருந்தா ஆத்திரத்தில் அன்றைய தினமே போய் புகார் கூறியிருக்க வேண்டும். ஒருவருடம் கழித்துதான் புகார் அளிப்பார்களா? பணம் பறிக்க வேண்டும் என்கிற நோக்கமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும்தான் இதில் இருக்கிறது” என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு