Published:Updated:

`ஓசி பிரியாணி; ஹோட்டலுக்குள் பாக்ஸிங்!’ -வாணியம்பாடியை அதிரவைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்

சி.சி.டி.வி காட்சிகள்
சி.சி.டி.வி காட்சிகள்

ஓசியில் பிரியாணி தர மறுத்த ஹோட்டல் உரிமையாளரை அடித்து உதைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் கலீம் என்பவர் `காஜா ரெஸ்டாரெண்ட்’ என்ற பெயரில் பிரியாணி கடை வைத்துள்ளார். இந்தக் கடைக்கு 11-ம் தேதி இரவு மது போதையில் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் வந்தனர்.

ஹோட்டல்
ஹோட்டல்

அவர்கள், சிக்கன் பிரியாணியை இரண்டு பார்சல் வாங்கினர். அதற்குப் பணம் கொடுக்காமல் ஹோட்டலிலிருந்து வெளியே செல்ல முயன்றபோது, சர்வர் தடுத்துள்ளார். அப்போது, பாக்கெட்டில் இருந்த 50 ரூபாயைத் தூக்கி வீசி ஓட்டுநர்கள் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

`ஒரு பிரியாணி விலை ரூ.40,076!'- ஆன்லைனில் ஏமாந்த சென்னை கல்லூரி மாணவி

`இரண்டு பார்சல் சிக்கன் பிரியாணி 240 ரூபாய்; பணத்தை எடுத்துவைத்துவிட்டுப் போங்க’ என்று கடை உரிமையாளர் கலீம் கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள் திடீரென பாக்ஸர்களைப் போல பாய்ந்து சென்று உரிமையாளர் முகத்தில் குத்து விட்டனர்.

சி.சி.டி.வி காட்சிகள்
சி.சி.டி.வி காட்சிகள்

தடுக்க முயன்ற சர்வரையும் தாக்கினர். ஹோட்டலில் இருந்த பொருள்களையும் உடைத்து அட்டகாசம் செய்தனர். தாக்குதலில் கடை உரிமையாளர் கலீம், சர்வர் ஆஜம் ஆகியோர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிலுக்கு ஹோட்டல் ஊழியர்களும் ஆட்டோ ஓட்டுநர்களைத் தாக்கினர். இந்தக் காட்சிகள் கடையிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தன. அதைவைத்து, வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். 

சி.சி.டி.வி காட்சிகள்
சி.சி.டி.வி காட்சிகள்

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜெயபாரத், செல்வபிரபு ஆகிய இரண்டு பேரையும் இன்று கைதுசெய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு