Published:Updated:

`மோடி குறித்து விமர்சனம்!’ - ஓவைசி, திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது வழக்கு

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

வாணியம்பாடியில் தடையை மீறி இஸ்லாமியக் கூட்டமைப்புகள் பொதுக்கூட்டம் நடத்தியது தொடர்பாக அஸாதுதீன் ஓவைஸி, திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த 19-ம் தேதி மாலை, ஓவைஸியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குக் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

வாணியம்பாடி
வாணியம்பாடி

சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தேசியத் தலைவர் அஸாதுதீன் ஓவைஸி, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டெல்லி (ஜே.எம்.இ) ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவிகள் உட்படப் பலர் கலந்துகொண்டு மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

ஓவைஸி பேசுகையில்,``சி.ஏ.ஏ திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிரானது. பா.ஜ.க அரசு, சாதியின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து இஸ்லாமியர்களை மிரட்ட நினைத்தால், அது நடக்காது. இஸ்லாமியர்கள் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.

அஸாதுதீன் ஓவைஸி
அஸாதுதீன் ஓவைஸி

ஹிட்லரின் ஆட்சியின் போது ஜெர்மனியில் யூதர்கள் அடைத்துவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மீது இதுபோன்ற சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு யாருடைய தலைமையும் இல்லை. இது, மக்களின் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழக முதல்வர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறவேண்டும்’’ என்றார் ஆவேசமாக.

திருமுருகன் காந்தி பேசுகையில், ``பாகிஸ்தானைப் பிரிவினை படுத்தியவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை; இந்துத்துவவாதிகள் தான். இங்குள்ளவர்கள் யாருமே `இந்து’ இல்லை. வேதத்தை ஏற்றுக்கொண்டவன் மட்டுமே இந்து. எங்கள் உயிரே போனாலும், தமிழகத்தில் இஸ்லாமியனைப் பிரிப்பதை ஏற்க மாட்டோம். `இஸ்லாம்’ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தது. குடியுரிமை இல்லாதவனுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், கூலி கிடைக்காது. இதுதான் குடியுரிமையின் சூழ்ச்சி’’ என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தநிலையில், தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியது, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து பேசியது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தேசியத் தலைவர் அஸாதுதீன் ஓவைஸி, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டெல்லி மாணவ, மாணவிகள் உட்பட 17 பேர் மீது வாணியம்பாடி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு