Published:Updated:

அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்! - சாராய சாம்ராஜ்ஜியம்... 80 வழக்குகள்... 7 குண்டாஸ்

மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம், மகேஸ்வரியைப் பற்றிக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். “ `தூள்’ படத்தில் வருகிற சொர்ணாக்காவை நினைவிருக்கிறதா

அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்! - சாராய சாம்ராஜ்ஜியம்... 80 வழக்குகள்... 7 குண்டாஸ்

களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம், மகேஸ்வரியைப் பற்றிக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். “ `தூள்’ படத்தில் வருகிற சொர்ணாக்காவை நினைவிருக்கிறதா

Published:Updated:
மகேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
மகேஸ்வரி

சாராய மகேஸ்வரி... வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில், இந்தப் பெயரைக் கேட்டாலே அச்சத்தில் நடுங்குகிறார்கள்!

‘திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கால் நூற்றாண்டுக்காலமாக ஒரு சாராய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிவைத்திருக்கிறார் மகேஸ்வரி. இதுவரை அவர்மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருக்கின்றன... ஏழு முறை குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது... ம்ஹூம், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அவரது கொட்டம் கொஞ்சம்கூட அடங்கவில்லை. சமீபகாலமாக அவரது போதை பிசினஸும் அட்ராசிட்டியும் அதிகமாகியிருக்கின்றன. சமூக அக்கறையோடு அவரை எதிர்க்கும் இளைஞர்கள் மிரட்டப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள். அவரது சாராய விற்பனையை, வன்முறைச் செயல்களைத் தடுக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது போலீஸ். தைரியமாக நடவடிக்கை எடுக்கத் துணிகிற சில போலீஸ் அதிகாரிகளும் அங்கிருந்து தூக்கியடிக்கப்படுகிறார்கள். கமிஷன் வாங்கிக்கொண்டு, கண்டும் காணாததுபோலக் கடந்து செல்வதோடு மட்டுமல்லாமல், மகேஸ்வரிமீது புகார் கொடுக்கச் செல்லும் இளைஞர்கள் மீதே பிரச்னையைத் திருப்பிவிடுகிறது உள்ளூர் போலீஸ். வாணியம்பாடியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மகேஸ்வரியைப் பற்றி விசாரித்து ஜூ.வி-யில் எழுதுங்கள்... அவரது அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!’ என்றொரு கடிதம் நமது அலுவலகத்துக்கு வந்தது. வாணியம்பாடிக்கு விரைந்தது ஜூ.வி க்ரைம் டீம்!

அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்! - சாராய சாம்ராஜ்ஜியம்... 80 வழக்குகள்... 7 குண்டாஸ்

‘க்ரைம் கிராஃப்’ வளர்ந்த கதை!

களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம், மகேஸ்வரியைப் பற்றிக் கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். “ `தூள்’ படத்தில் வருகிற சொர்ணாக்காவை நினைவிருக்கிறதா? அதைவிட டெரரான லேடி மகேஸ்வரி. ஒரு சினிமாவில், கஞ்சா விற்கும் பெண்ணைக் கைதுசெய்வதற்காக போலீஸ் டீமுடன் செல்வார் வடிவேலு. அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அவர் நுழைந்தவுடன், தனது உடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து எறியும் பெண், வடிவேலுவின் போலீஸ் சீருடையை உருவி அணிந்துகொண்டு தப்பிவிடுவார். அந்த காமெடிக் காட்சியே மகேஸ்வரியின் ‘க்ரைம் டைரி’யிலிருந்து எடுக்கப்பட்டதுதான். 18 வருடங்களுக்கு முன்பு டி.எஸ்.பி ஒருவர் மகேஸ்வரியைக் கைதுசெய்ய வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது, கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்ட மகேஸ்வரி, தனது உடைகளைக் கழற்றி ஜன்னல் வழியாக வீசியெறிந்து, அந்த டி.எஸ்.பி-யை எச்சரித்தார். இப்போதும்கூட மகேஸ்வரிக்கு ஏதாவது பிரச்னையென்றால், அவரிடமிருக்கும் பெண்கள் சிலர் தாங்களாகவே அவர்களின் ஜாக்கெட்டைக் கிழித்துக்கொண்டு, பாலியல் புகார் கொடுத்து, பிரச்னையைக் கிளப்புகிறார்கள்’’ என்றவர்கள், மகேஸ்வரியின் ‘க்ரைம் கிராஃப்’ கிடுகிடுவென வளர்ந்த கதையை விவரித்தார்கள்...

‘‘போலியோவால் ஒரு கால் செயலிழந்த மகேஸ்வரி, வாணியம்பாடி நேதாஜி நகரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது 20-வது வயதில் ‘மோர்’ அண்டாவில் கள்ளச்சாராயப் பொட்டலங்களைப் போட்டு விற்கத் தொடங்கினார். அப்போது முதன்முறையாகக் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றவருக்கு, சீனியர் குற்றவாளிகளுடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஆண்களையும், அதை விற்பனை செய்வதற்காகப் பெண்களையும் தன் பக்கம் இழுத்தார். தனக்கென ஒரு கேங் உருவானதால், பணம் கொட்டத் தொடங்கியது. நேதாஜி நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரி ஆகிய பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். உள்ளூர் போலீஸார் அவரை ‘சொர்ணாக்கா’ என்று அடைமொழியிட்டு அழைக்க, குறுகிய காலத்திலேயே தாதாவாக உருவெடுத்தார் மகேஸ்வரி!

சாராய வருமானத்தில் வீடுகளையும் நிலங்களையும் வாங்கிக் குவித்தார். அவரது சொத்து மதிப்பு லட்சத்திலிருந்து கோடிகளுக்கு மாறியது. வாணியம்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கும் வாரம்தோறும் படியளந்தார். பின்னாளில், காவலர்கள் மகேஸ்வரியின் வீட்டுக்கே வந்து ‘உரிமையோடு’ வாங்கிச் சென்றார்கள். எரிசாராயம், கஞ்சா, ரௌடியிசம் எனத் தனது ‘தொழிலை’ விரிவுபடுத்தினார்.

மகேஸ்வரிக்குப் பக்கபலமாக இருப்பது அவரது குடும்பமும், அக்காக்கள் குடும்பமும்தான். மகேஸ்வரிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். கணவர் சீனிவாசன், மூத்த மகன் சின்ராசு இருவரும் எரிசாராயம், கஞ்சாத் தொழிலை பார்த்துக்கொள்கிறார்கள். இரண்டாவது மகன் தேவேந்திரன் பைக், கார் போன்ற வாகனத் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். சாராயம், கஞ்சா கடத்துவதற்கு இவர்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். திருட்டு வண்டிகளைப் பயன்படுத்திக்கொண்டு மாட்டும்போது, அப்படியே விட்டுவிட்டுச் செல்வது இவர்களின் ஸ்டைல். மூன்றாவது மகன் மோகன் கல்லூரிக்குச் செல்கிறார்.

அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்! - சாராய சாம்ராஜ்ஜியம்... 80 வழக்குகள்... 7 குண்டாஸ்

சிறையிலடைத்த போலீஸ்... சீக்கிரமே வெளியில் வந்த மகேஸ்வரி!

2020, மே மாதம், மகேஸ்வரியின் சாராய சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்ட, அப்போதைய எஸ்.பி விஜயகுமார் களமிறங்கினார். மகேஸ்வரியின் வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி, 21 கிலோ கஞ்சாவையும், 20 லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினார். அப்போதும்கூட மகேஸ்வரியின் குடும்பத்தினர், காவல்துறையினரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்கள். அந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, மகேஸ்வரியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தது போலீஸ். தொடர்ந்து, குற்றப் பின்னணியுடைய அவரது 40 அசையா சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார் எஸ்.பி விஜயகுமார்.

சார்பதிவாளர் அலுவலகம் மூலம் சொத்துகள் கணக்கிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இடையில் என்ன நடந்ததோ... எஸ்.பி விஜயகுமார் திடீரென்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. அடுத்தடுத்து வந்த எஸ்.பி-க்களும் மகேஸ்வரியைக் கண்டுகொள்ளவில்லை. நான்கு மாதங்களிலேயே சிறையிலிருந்து வெளியில் வந்த மகேஸ்வரி, தனது ரிவெஞ்சை ஆரம்பித்தார். தன்மீது புகார் அளித்தவர்களைக் கண்டுபிடித்து அட்டாக் செய்ய ஆரம்பித்தார். சமீபத்தில், அவரது சாராய விற்பனை குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்த உள்ளூர் இளைஞர்கள் சிலரை மகேஸ்வரியின் ஆட்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்’’ என்றார்கள்!

மகேஸ்வரியைப் பற்றி போலீஸுக்குத் தகவல் தெரிவித்ததால், தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் சிலரைத் தேடிப்பிடித்துப் பேசினோம்... ‘‘மகேஸ்வரியைப்போல கொடூரமான பெண்ணைப் பார்க்க முடியாது. அவரிடம் ஈவிரக்கமற்ற ஏகப்பட்ட அடியாட்கள் இருக்கிறார்கள். அவர் ஏவினால், கேள்வியே இல்லாமல் எதையும் செய்யக்கூடியவர்கள். வெளியூர்களிலிருந்து லாரிகளில் காய்கறிப் பெட்டிகளுக்குள்ளே வைத்து எரிசாராயம் கொண்டுவரப்படுகிறது. வாணியம்பாடி எல்லை வரைதான் மறைத்து எடுத்துவரும் இந்த ஏற்பாடுகளெல்லாம்... வாணியம்பாடிக்குள் வண்டி நுழைந்துவிட்டால், போலீஸ்காரர்கள் சல்யூட் அடித்து வண்டியை அனுப்பிவிடுவார்கள்” என்றவர்கள், அவரது சாராய விற்பனை நெட்வொர்க்கைப் பற்றியும் விவரித்தார்கள்...

ஜாக்கெட் கிழிப்பு புகார்!

“மகேஸ்வரியிடம் வாணியம்பாடி முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள். 100 மில்லி பாக்கெட் சாராயத்தை 25 ரூபாய்க்கு விற்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கமிஷனாகக் கொடுத்துவிடுவார் மகேஸ்வரி. போலீஸார் யாராவது மகேஸ்வரியைப் பிடிக்கச் சென்றாலோ அல்லது இவர்களைப் பிடிக்கச் சென்றாலோ, இந்தப் பெண்கள் தாங்களாகவே ஜாக்கெட்டைக் கிழித்துக்கொண்டு பிரச்னை செய்வார்கள். சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி போலீஸில் மனு கொடுத்த எங்கள்மீதும், ஜாக்கெட்டைக் கிழித்து மானபங்கப்படுத்தியதாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள். இவர்களிடம் விலைபோன போலீஸாரும் எங்கள்மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறார்கள்.

கடந்த மாதம் எங்கள் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, கள்ளச்சாராயத்துக்கு எதிராகப் போராடிவரும் எங்களில் சிலரை மகேஸ்வரியின் ஆட்கள் கத்தியுடன் தாக்க முற்பட்டார்கள். சம்பவ இடத்தில், லோக்கல் போலீஸார் இருந்தும் எங்களைப் பாதுகாக்கவில்லை. இந்த நிலையில்தான் ஏப்ரல் 4-ம் தேதி, மகேஸ்வரிக்குச் சொந்தமான ஒரு வீட்டிலிருந்து 30 மூட்டை எரிசாராயப் பாக்கெட்டுகளைக் கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தோம். அப்போதும், மகேஸ்வரியைக் கைதுசெய்யாமல் எங்களை மிரட்டிவிட்டு சாராய மூட்டைகளை மட்டும் போலீஸார் தூக்கிச் சென்றார்கள். மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதியும், நேதாஜி நகர் பகுதியில் மகேஸ்வரியின் ஆட்களிடமிருந்து 13 சாராய மூட்டைகளை அப்பகுதி இளைஞர்கள் கைப்பற்றிக் கொடுத்தனர். அப்போதும்கூட மகேஸ்வரியின் ஆட்கள் மீதோ, மகேஸ்வரி மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், எங்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

பகலில் தலைமறைவு... இரவில் கார் பவனி!

அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில இளைஞர்களிடமும் பேசினோம். “நேதாஜி நகர் மாரியம்மன் கோயில் பண்டிகை முடிந்தவுடன், மார்ச் 8-ம் தேதி பண்டிகைச் செலவுகளைக் கணக்கிடுவதற்காக ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. அப்போது அங்கு வந்த மகேஸ்வரியின் ஆட்கள், மீதமிருந்த தொகையை எடுத்துச் சென்றார்கள். இதைத் தடுக்க முயன்ற ஆறு பேரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதில், காயமடைந்த இளைஞர்கள் போலீஸில் புகாரளிக்கச் சென்றபோது, அவர்கள்மீதே போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆத்திரமடைந்த இளைஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகே மகேஸ்வரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார். பகலில் ஊருக்குள் தலைகாட்டுவதில்லை. ஆனால், இரவு 9 மணிக்கு மேல் மகாராணி போல் காரில் பவனிவருகிறார். அவரது இரவு பவனி குறித்து போலீஸுக்குத் தெரிவித்தோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை...” என்று கொந்தளித்தார்கள்.

மகேஸ்வரி மீதான புகார்கள் குறித்து, திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். ‘‘மகேஸ்வரி பல வருடங்களாகச் சாராயம் விற்பவர்தான். நான் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கூடுதல் எஸ்.பி-யாக இருந்தபோதே, அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இப்போதும்கூட, டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான டீமை அனுப்பி அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். திருவிழாவின்போது நடந்த தகராறிலும், சாராய மூட்டை கைப்பற்றப்பட்ட விவகாரத்திலும் அவர்மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தற்போது தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடிவருகிறோம்’’ என்றார்.

கால் நூற்றாண்டுகளாகச் சாராயம் விற்றுவருகிறார். 80 வழக்குகள் இருக்கின்றன. ஏழு முறை குண்டாஸ் பாய்ந்திருக்கிறது. நாளுக்கு நாள் அவரது போதை பிசினஸும் ரௌடியிசமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாணியம்பாடி மக்களின் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார். அவருக்குத் தொடர்புடைய இடங்களிலிருந்து லிட்டர் லிட்டராகச் சாராயத்தை மக்களே பிடித்துக்கொடுக்கிறார்கள். அவரது அடியாட்களையும் அப்பகுதி இளைஞர்கள் போலீஸுக்கு அடையாளம் காட்டுகிறார்கள். இதற்கு மேலும் காவல்துறை என்ன எதிர்பார்க்கிறது... மகேஸ்வரியைக் கைதுசெய்ய காவல்துறை ஏன் அஞ்சுகிறது... அப்பாவிகளை லாக்கப்பில் வைத்து, அடித்து உதைத்து, சித்ரவதை செய்வதில் வீரம் காட்டும் காவல்துறை, மகேஸ்வரி விஷயத்தில் ஏன் கைகட்டி நிற்கிறது... மக்களின் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுமா காவல்துறை?

மகேஸ்வரி குடும்பத்தில் இரண்டு கவுன்சிலர்கள்!

“மகேஸ்வரிக்கு மொத்தம் நான்கு அக்காக்கள். அவர்களும் சாராய வியாபாரம்தான் செய்கின்றனர். ராணி என்ற ஒரு அக்காவின் மகன் கிருஷ்ணன்மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவர் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கவுன்சிலராகப் போட்டியிட்டார். அப்போது அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதுசெய்யப்பட... சிறையிலிருந்தபடியே வெற்றிபெற்றார். அதேபோல, மகேஸ்வரியின் மற்றோர் அக்கா கிருஷ்ணவேணி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இறந்துவிட்டார். கிருஷ்ணவேணியின் மகன் நவீனும் சாராய வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நவீனின் இரண்டாவது மனைவி சோஃபியா வளையாம்பட்டு ஊராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ளார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் வழக்குகளிலிருந்து தப்பிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் மகேஸ்வரி” என்று கொதிக்கிறார்கள் மக்கள்!

தயார்நிலையில் 10 வழக்கறிஞர்கள்!

மகேஸ்வரி சிறையில் அடைக்கப்பட்டால், அவரை வெளியே எடுப்பதற்கென்றே 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பட்டாளம் இருக்கிறது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால், 90 நாள்கள் கழித்து சென்னை உயர் நீதிமன்ற குண்டாஸ் ஆலோசனைக்குழுவில் முறையிட்டு, சிறைக் காவல் நீட்டிப்பை ரத்துசெய்ய முடியும். இந்த வழியைப் பின்பற்றியே ஒவ்வொரு முறையும் தன் வழக்கறிஞர்கள் மூலம் நான்கைந்து மாதங்களிலேயே வெளியே வந்துவிடுகிறார் மகேஸ்வரி!

புறக்காவல் நிலையம் எதற்கு?

மகேஸ்வரியின் சாராய விற்பனையால் நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரி ஆகிய பகுதிகள் காவல்துறையினரின் பதிவேட்டில், ‘எளிதில் கொந்தளிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால், நேதாஜி நகரில் கண்காணிப்புப் பணிகளுக்காகப் புறக்காவல் நிலைய அறை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், போலீஸார் அங்கு பணியில் இருப்பதில்லை. எப்போதுமே அறையின் கதவு பூட்டப்பட்டே இருக்கிறது. புறக்காவல் நிலையத்தின் அருகிலேயே சாராய விற்பனையும் கனஜோராக நடந்துவருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism