Election bannerElection banner
Published:Updated:

`100 வீடுகள்; கட்டுக்கட்டாகப் பணம்!’ - வாணியம்பாடி பெண் சாராய வியாபாரியின் சொத்துகளால் மிரண்ட போலீஸ்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

`வாணியம்பாடியில் குடும்பத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள சாராய பெண் வியாபாரியின் அனைத்து சொத்துகளும் அரசுடைமையாக்கப்படும்' என்று எஸ்.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மீது ஏற்கெனவே சாராயம் விற்பது தொடர்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரால் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்ற மகேஸ்வரி மீது 10 முறைக்கும் மேல் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. எனினும், நீதிமன்றத்தில் முறையிட்டு குண்டர் தடுப்புக் காவலிலிருந்து நான்கைந்து மாதங்களிலேயே ஜாமீனில் வந்துவிடுவார். வெளியில் வந்த பிறகும் மகேஸ்வரி போதைப் பொருள்கள் விற்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகக் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

கைதுசெய்யப்பட்ட மகேஸ்வரி
கைதுசெய்யப்பட்ட மகேஸ்வரி

இந்த நிலையில், வாணியம்பாடி தாலுகா (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் மகேஸ்வரியின் வீட்டை அதிரடியாகச் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அப்போது, 21 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களையும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். அப்போது, மகேஸ்வரியின் குடும்பத்தினர் காவல் துறையினரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். தாக்குதலில் சூர்யா என்ற பெண் காவலரின் கையில் காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்தில், மகேஸ்வரியின் கணவன் சீனிவாசன், மூத்த மகன் சின்ன ராஜா ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

`இன்டர்நெட் போன்கால்; வங்கிக் கணக்கில் பணம்!' - வேலூர் தொழிலதிபர்களை மிரட்டும் ரௌடி ஜானி

மகேஸ்வரி, அவரின் மருமகள் காவியா, இளைய மகன் தேவேந்திரன், மகேஸ்வரின் அக்கா மகள் உஷா உட்பட மொத்தம் 7 பேரை பிடித்துக் கைதுசெய்தனர். இவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் வேலூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மகேஸ்வரி உட்பட மூன்று பெண்களை வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் தேவேந்திரனை வாணியம்பாடி கிளைச் சிறையிலும் அடைத்துள்ளனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் காவலர் சூர்யாவை, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் இன்று நேரில் நலம் விசாரித்தார்.

பெண் காவலரிடம் நலம் விசாரித்த எஸ்.பி
பெண் காவலரிடம் நலம் விசாரித்த எஸ்.பி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி விஜயகுமார், ``மகேஸ்வரி சட்ட விரோதமாகப் போதை பொருள்களை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். அதன் மூலம் அசையா சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார். அவரின் சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சார் பதிவாளர் அலுவலகம் மூலம் சொத்துகள் கணக்கிடும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 40 சொத்துகளுக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்.

மகேஸ்வரியைப் பிடித்த வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் பேசினோம். ``மகேஸ்வரி ஒரு கொடூரமான பெண் குற்றவாளி. இவரை வாணியம்பாடியில் தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலமான சாராய வியாபாரி. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாராய விற்பனை செய்துவருகிறார். ஆரம்ப காலகட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்தார். மகேஸ்வரியின் கணவர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் மீதும் 10 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

எஸ்.பி விஜயகுமார்
எஸ்.பி விஜயகுமார்

முதற்கட்ட விசாரணையில், வாணியம்பாடி பகுதிகளில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மகேஸ்வரிக்குச் சொந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது. இனி சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கான கடும் நடவடிக்கைகளை எஸ்.பி சார் எடுத்து வருகிறார். அதற்கு முன்னோட்டமாகத்தான் மகேஸ்வரின் அனைத்து சொத்துகளும் அரசுடைமையாக்கப்படுகிறது.

இவர் மீது புகார் கொடுக்க வாணியம்பாடி மக்களே பயப்படுகிறார்கள். யாரேனும் புகார் கொடுத்தால் அவர்களைத் தாக்குகிறார்கள். எஸ்.பி சாரின் அதிரடியான நடவடிக்கையால் வாணியம்பாடி மக்கள் இப்போதுதான் நிம்மதியடைந்துள்ளனர்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு