Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: `நாயகன்’ வரதாபாய்க்காக உயிரையும் விடத் துணிந்த மும்பைத் தமிழர்கள் | பகுதி 5

வரதாபாய்க்கு அனைத்து போலீஸ் அதிகாரிகள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. வரதாபாய் போலீஸ் நிலையம் வருகிறாரென்றால் போலீஸ் நிலையமே பரபரப்பாகிவிடும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்கள் வரதாபாய்க்காகக் கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்தனர். கள்ளச்சாராயத் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருமானம் வரதாபாய்க்குக் கிடைத்தாகச் செய்திகள் கூறுகின்றன. கள்ளச்சாராயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், வரதாபாய் வேறு வேலைகளிலும் ஈடுபட்டார். அவரை எதிர்த்த எவரையும் வரதாபாய் விட்டுவைத்ததில்லை. மும்பையின் முக்கியமான சக்தியாக மெல்ல மெல்ல வரதாபாய் வளர்ந்துவந்தார்.

கள்ளச்சாராய வியாபாரத்துக்குத் தனி இலக்கணம்

கள்ளச்சாராய வியாபாரத்துக்கென புது இலக்கணங்களை வகுத்தார் வரதாபாய். கள்ளச்சாராய வியாபாரத்தை அரசு நிர்வாகம்போல் நடத்திவந்தார். கடத்தல் வேலைக்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு பகுதியும் கள்ளச்சாராய விற்பனைக்கென ஒவ்வொருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 75 முதல் 130 சட்டவிரோத சாராயக் கடைகள் இருக்கும். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு கடை சார்பாக போலீஸாருக்கு 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. இதற்காகவே தனிப் பதிவேடு பராமரிக்கப்பட்டது. தண்ணீர் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் சாராயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கடைக்கான குறிப்பிட்ட எல்லைக்குள் வேறு யாரும் கடை வைக்கக் கூடாது. எனவே, ஒருவர் தொழில் மற்றவர் தலையீடு இல்லாமல் நடந்தது.

வியாபாரத்துக்கான இலக்கணத்தை உருவாக்கினாலும், அதை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் வேண்டும். கள்ளச்சாராய வியாபாரத்தின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள தனது உதவியாளர்கள் தாமஸ் குரியன் மற்றும் படாசோமா ஆகிய இரண்டு பேரை நியமித்தார் வரதாபாய். வியாபாரத்தில் போட்டியென எவரும் நுழைய முடியவில்லை. எல்லா போட்டியாளர்களையும் வரதாபாய் அடியோடு ஒழித்தார். ஊரிலிருந்து அதிகமாக ஆட்களை அழைத்து வந்து அரசு நிலத்தை அபகரித்து, தனியாருக்கு விற்பனை செய்யவும் வரதாபாய் தயங்கவில்லை. தமிழர்களிடையே ஏதாவது பிரச்னை என்றால் நேரடியாக சம்பவ இடத்துக்கே சென்று பேசி பிரச்னையைத் தீர்த்துவைப்பதில் வரதாபாய் முதல் ஆளாக இருந்தார். எனவேதான் தமிழர்கள் மத்தியில் முடிசூடா மன்னனாக அவரால் திகழ முடிந்தது.

நிழலுலக ராஜாக்கள்: `நாயகன்’ வரதாபாய்க்காக உயிரையும் விடத் துணிந்த மும்பைத் தமிழர்கள் | பகுதி 5

வரதாபாய் ஆட்கள் பாலியல் தொழிலும் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் வரதாபாய் நேரடியாகத் தொடர்புகொண்டிருக்கவில்லை எனினும், அவரது ஆட்கள் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது எனச் சொல்கிறார்கள்.

பிளாக் டீயும், வரதாபாயும்!

வரதாபாய்க்கு அனைத்து போலீஸ் அதிகாரிகள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. வரதாபாய் போலீஸ் நிலையம் வருகிறாரென்றால் போலீஸ் நிலையமே பரபரப்பாகிவிடும். வரதாபாய் போலீஸ் நிலையத்துக்கு வருவதன் அடையாளமாக, அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஒருவர் பிளாக் டீ கொண்டு வந்து உயரதிகாரியின் டேபிளில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார். பணம் வாங்கக்கூட நிற்க மாட்டார். பிளாக் டீ வந்துவிட்டால் உயரதிகாரி தனது அறையிலுள்ள அடுத்தகட்ட அதிகாரிகளை வெளியில் போகச் சொல்லிவிடுவார். செய்துகொண்டிருக்கும் வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு வரதாபாய் வரவுக்காக போலீஸ் அதிகாரிகள் காத்திருப்பர். `உன்னைச் சந்திக்க வருகிறேன். தேவையான ஏற்பாட்டை செய்’ என அறிவுறுத்தும்விதமாகவே பிளாக் டீ நடைமுறை கொண்டுவரப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரதாபாய் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்டபோதிலும் ஒரு வழக்கில்கூட அவரைச் சிக்கவைக்க முடியவில்லை. 1974-77 வரை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக ஒருவர்கூட சாட்சி சொல்ல முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் வரதாபாயை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீஸிலும் வரதாபாய்க்கு உளவாளிகள் இருந்தனர். வரதாபாய்க்கு அடிக்கடி தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். இதனால் வரதாபாயால் எளிதில் தப்பிக்க முடிந்தது.

வழக்குகள் இல்லை

வரதாபாய்
வரதாபாய்

1984-ம் ஆண்டு ஒரு திருப்பம் நேர்ந்தது. ரத்னகிரி மாவட்டத்தில் கடலில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள பொருள்களைக் கப்பலிலிருந்து இறக்கி ஆம்புலன்ஸில் கடத்திக்கொண்டு வந்தபோது தாமஸ் குரியன், சோனா ஆகியோர் டிரைவருடன் பிடிபட்டனர். இருவரும் வரதாபாய் வீட்டுக்கு ரத்னகிரியிலிருந்து அடிக்கடி போன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வரதாபாயை காஃபிபோசா (COFEPOSA) சட்டத்தில் கைதுசெய்யப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மாநில உள்துறை அமைச்சகம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி காஃபிபோசா கமிட்டியின் பரிந்துரையை ஏற்க மறுத்தது. அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமே காஃபிபோசா.

1983-ம் ஆண்டிலும் ஒரு சம்பவம். வரதாபாய் ஆட்கள் நடுக்கடலில் போலந்து நாட்டுக் கப்பலிலிருந்து மீன்பிடிப் படகில் கடத்தல் பொருள்களை இறக்கியபோது சுங்கவரி அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர். இரண்டு படகுகளையும் வரதாபாய்தான் வாடகைக்கு வாங்கினார் என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும் வரதாபாயைக் கைதுசெய்ய முடியவில்லை. 10 லட்சம் ரூபாய் அபராதமாகக் கட்டவேண்டிய நிலை மட்டும்தான் ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை கடத்தல் வழக்கில் சிக்கியபோது சாட்சிகள் வரதாபாய்க்கு சாதகமாக இருந்ததால் போலீஸாரால் அவரைக் கைதுசெய்ய முடியவில்லை.

மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற காரியங்களைச் செய்தபோதிலும் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வரதாபாய் தயங்கியதில்லை. மிகப்பெரிய முருக பக்தரான வரதாபாய், வி.டி.ரயில் நிலையம் அருகேயுள்ள 230 ஆண்டுகள் பழைமையான தர்காவுக்குச் செல்லும் பழக்கத்தைக்கொண்டிருந்தார். மும்பைக்கு வந்ததிலிருந்து அடிக்கடி அங்கு சென்று அங்குள்ள ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். இப்போதும் அவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை இந்த தர்காவில் அன்னதானம் செய்கின்றனர்.

பாலிவுட் பிரபலங்களும், கணபதி சிலையும்...

மாதுங்காவில் ஒவ்வோர் ஆண்டும் கணபதி விழாவின்போது வரதாபாய் சார்பாக வைக்கப்படும் கணபதி சிலை மும்பையில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கணபதியை தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வருவதுண்டு. `கூலி’ என்ற படத்தில் அமிதாப் பச்சன் நடித்தபோது படப்பிடிப்பில் காயமடைந்தார். அவர் குணமடைவதற்காக ஜெயா பச்சன் வரதாபாயின் கணபதி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டார். அதோடு கிருபானந்த வாரியாரும் இந்த கணபதியை தரிசிக்க வந்திருக்கிறார்.

அரசியல்வாதிகளிடமும் வரதாபாய்க்கு நல்ல தொடர்பு. ஒரு முறை சயான் கோலிவாடாவில் வரதாபாய் கட்டிய கோயிலை அப்போதைய முதல்வரின் மனைவி திறந்துவைத்தார். 1983-ம் ஆண்டில் சென்னையில் தனது மகளுக்குத் திருமணம் செய்துவைத்தார் வரதாபாய். இந்தத் திருமணத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் மும்பை வந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மும்பையில் பிரமாண்ட பேரணியை நடத்தினார். மும்பையின் அரசோ காவல்துறையோ வரதாபாயிடமிருந்து அப்படியோர் அரசியல் நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கவில்லை.

அந்தப் பேரணிக்காக மும்பைக்குள் சிறப்பு ரயிலை இயக்கியவர் என்ற பெயரை வரதாபாய் பெற்றார். பேரணியில் கலந்துகொண்டவர்கள் மும்பையிலுள்ள இலங்கைத் தூதரத்தை முற்றுகையிட்டனர். மும்பையே ஸ்தம்பித்தது. கூட்டம் அதிகமாகிக்கொண்டே சென்றதால் ரயிலில் தமிழர்கள் யாரையும் ஏறவிடாமல் போலீஸார் தடுத்தனர். அப்படியிருந்தும் தமிழர்களுக்காக மாபெரும் பேரணியை நடத்தி தனது செல்வாக்கைக் காட்டினார் வரதாபாய். `தமிழர் பேரவை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் முலம் அந்தப் பேரணியை நடத்தி ஈழத்தமிழர்களுக்காக நிதியும் வசூலித்துக் கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளச்சாராயம் மூலம் கோடிக்கணக்கில் பணம் வந்தாலும், ஒரு முறை அவர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது தனக்கு மாதம் 18,ஓஒ ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்தார். அது தனது செலவுக்கு போதுமானதாக இருக்கிறது என்றும் சேமிப்பில் இருக்கும் பணத்தை தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்தார். அவர் மீதான சாராயக் கடத்தல் புகார்கள் குறித்துக் கேட்டதற்கு, அடியோடு அந்தக் குற்றச்சாட்டை மறுத்த வரதாபாய், பத்திரிகைகள் விற்பதற்காக தன்னைப் பற்றி அப்படி எழுதுவதாகக் கூறினார்.

ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ட்விட்டர்

கூலியாக வாழ்க்கையைத் தொடங்கி, பணக்காரராகி அதிகாரத்துடனும் நெருங்கி அரசியலை தொட்டுப் பார்க்கும் நிலையை அடைந்தார் வரதாபாய். அதேநேரத்தில் அதே வகை உயரத்தை இன்னொரு தமிழரும் மும்பையில் பெற்றிருந்தார். ஹாஜி மஸ்தான்!

ஹாஜி மஸ்தானும் வரதாபாயும் இரு வேறு பகுதிகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தனர். அதற்கான சந்தர்ப்பம் கிட்டாமலேயே இருந்தது. இறுதியில் அந்தச் சந்தர்ப்பமும் வாய்த்தது. வரதாபாய் கைது மூலம் அது சாத்தியமானது.

தொடரும்...

முந்தைய பகுதிக்கு...

நிழலுலக ராஜாக்கள்: தூத்துக்குடி டூ மும்பை ‘நாயகன்’ - வரதராஜ முதலியாரின் கதை | பகுதி-4
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு