Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: தூத்துக்குடி டூ மும்பை ‘நாயகன்’ - வரதராஜ முதலியாரின் கதை | பகுதி-4

நிழலுலக ராஜாக்கள்
நிழலுலக ராஜாக்கள்

ஆரம்பத்தில் சி.எஸ்.டி.ரயில் நிலையம் அருகில் தனது தளத்தை அமைத்திருந்த வரதாபாய் ஒரு கட்டத்தில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியை தன் வசிப்பிடமாக தேர்ந்தெடுத்தார். தமிழர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை கருதி தனது தளத்தை சயான் கோலிவாடாவிற்கு மாற்றினார்.

ஹாஜி மஸ்தானுக்கு மும்பை துறைமுகம் எப்படியோ அது போலதான் வரதராஜ முதலியாருக்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். அங்குதான் மாஃபியா கலாசாரத்துக்கான ஆரம்ப விதையை விதைத்தார் வரதராஜ முதலியார். வெளியூர்களில் இருந்து வரும் ரயில் பயணிகளின் உடைமைகளை சுமக்கும் சாதாரண கூலித்தொழிலாளியாக வரதாபாய் என்று அழைக்கப்படும் வரதராஜ முதலியார் தனது வாழ்க்கையை மும்பையின் ரயில் நிலையத்தில் தொடங்கினார்.

ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தான்
ட்விட்டர்

தூத்துக்குடியை சேர்ந்த வரதராஜ முதலியார் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. தனது 7-ம் வயதில் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டூடியோவில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். ஆனால் போட்டோ ஸ்டூடியோவில் தொடர வரதாபாய்க்கு விருப்பம் இல்லை. எனவே சென்னையிலிருந்து ரயில் மூலம் 1945ம் ஆண்டு மும்பை வந்தார். எங்கு இறங்கினாரோ அங்கிருந்தே வாழ்க்கையை தொடங்கினார். கூலி தொழிலாளியாக வேலை செய்தார்.

ஹாஜியும், வரதாபாயும்

ஒருபுறம் ஹாஜி மஸ்தான் துறைமுகத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். மறுபக்கம் வரதாபாய் சி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் மும்பையை ஆளப்போகிறார்கள் என அப்போது அவர்களுக்கு தெரியாது. இருவருமே யாரிடமும் எளிதில் பழகக்கூடியவர்கள். உடன் பணிபுரிபவர்கள் மனதில் இருவரும் எளிதில் இடம் பிடித்தனர். பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறி இருவருக்குமே இருந்தது. வரதாபாய் ரயில் நிலையத்தில் வேலை செய்துவிட்டு அருகில் உள்ள ஒரு தெருவில் சாலையோரம் தங்கிக்கொண்டார். தெருவோரத்தில் தங்குவதால் ரயில் நிலையத்தில் உள்ள கூலிகள் மட்டுமல்லாது திருடர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நட்பும் கிடைத்தது. அவர்கள் மூலம் கூலி வேலை தவிர்த்து வேறு வழிகளில் எப்படி சம்பாதிப்பது என்பதையும் வரதாபாய் தெரிந்து கொண்டார். அவர்களை பயன்படுத்தியே புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்தார்.

ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ட்விட்டர்

சி.எஸ்.டி.ரயில் நிலையத்தில் கூலியாக வரதாபாய் வேலை செய்ததில் ஒரு சில அணாக்களை மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. ஆனால் புதிய நண்பர்கள் மூலம் எளிதில் அதிகப்படியான அளவில் பணம் சம்பாதிக்கக்கும் வழி அவருக்கு தென்பட்டது. 1952-ம் ஆண்டு மும்பை மாகாணத்தின் முதல்வராக இருந்த மொரார்ஜி தேசாய், திடீரென பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவித்தார். இதனால் மது வகைகள் லைசென்ஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஏழை மக்களால் அரசின் லைசென்ஸ் வாங்கி மது குடிக்க முடியவில்லை. விளைவாக கள்ளச்சாராய வியாபாரம் அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த சூழலில்தான் வரதாபாய் வந்தார். அரசின் முடிவு கொடுத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார்.

கள்ளச்சாராய சந்தை

கள்ளச்சாராய தொழிலுக்கு துணிச்சலும், துடிப்பான பேச்சுத்திறமையும் மிகவும் முக்கியம். வரதாபாயிடம் அந்த திறன்கள் இருந்தன. தான் சொல்வதே சரி என அனைவரையும் நம்ப வைக்கும் வல்லமை படைத்தவர் வரதாபாய். வரதாபாயுடன் இருந்த பலருக்கு குடும்பம் இல்லை. தனியாகத்தான் இருந்தனர். வரதாபாய் செய்யச் சொல்லும் எல்லாவற்றையும் செய்தனர். ரெளடிகளின் நட்பையும் வரதாபாய் எளிதில் பெற்றார். ரெளடிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தொழிலில் இருந்தனர். அவர்களோடு சேர்ந்து கள்ளச்சாராயம் கடத்தும் பணியில் வரதாபாய் ஈடுபட்டார். ஓரிரவில் கள்ளச்சாராயம் எடுத்துச்சென்ற போது போலீஸ்காரர் ஒருவரிடம் சிக்கிக்கொண்டார். ஆனால் வரதாபாயின் துடுக்கான பேச்சுத்திறமையால் போலீஸ்காரரிடமிருந்து தப்பிக்க முடிந்தது. அவரது பேச்சுத்திறமைதான் மும்பையின் கள்ளச்சாராய மாபியா மன்னனாக அவர் மாற காரணமாக இருந்தது.

மும்பை
மும்பை

ஆரம்பத்தில் சி.எஸ்.டி.ரயில் நிலையம் அருகில் தனது தளத்தை அமைத்திருந்த வரதாபாய் ஒரு கட்டத்தில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியை தன் வசிப்பிடமாக தேர்ந்தெடுத்தார். தமிழர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை கருதி தனது தளத்தை சயான் கோலிவாடாவிற்கு மாற்றினார். அங்கு ஏற்கனவே கள்ளச்சாராயம் கடத்தலில் செல்லமுத்து என்பவர் கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். வரதாபாய் சென்ற பிறகு செல்லமுத்துவின் செயல்பாடுகள் குறைய ஆரம்பித்தது.

தனது எல்லையை பாதுகாத்துக்கொள்ளவும், அச்சுறுத்தல் விடுக்கும் எதிரிகளை அழிக்கவும் படாராஜன் என்பவரின் உதவியையும் வரதாபாய் எடுத்துக் கொண்டார். அந்த காலத்து மும்பையில் படாராஜன், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா ஆகியோர்தான் பெரிய கேங்ஸ்டர்களாக இருந்தனர். படாராஜன் வரதாபாய் கேட்ட உதவியை செய்து கொடுத்ததோடு நில்லாமல் தன்னுடைய பழைய தொழிலை கைவிட்டான். சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்வதே அவனது பழைய தொழில். அதை விட்டுவிட்டு மிரட்டி பணம் பறித்தல், நிதி மற்றும் நில பிரச்னையை தீர்த்து வைத்து அதில் பணம் சம்பாதித்தல் முதலிய வேலைகளில் வரதாபாயின் ஆதரவோடு இறங்கினர் படாராஜனும் அவனது ஆட்களும்.

வரதா பாய்
வரதா பாய்

நாளடைவில் செல்லமுத்து கள்ளச்சாராய தொழிலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவரது ஆட்களை அப்படியே வரதாபாய் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். மும்பையில் உள்ள சயான், கோலிவாடா, தாராவி, மாட்டுங்கா மாகிம், செம்பூர் போன்ற பகுதிகளிலுள்ள குடிசைப்பகுதியில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயம் வரதாபாய் ஆட்கள் மூலம் மும்பையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கடத்தப்பட்டது.

போலீஸூக்கு வேலை அளித்த தாதா

இரவு 12 மணிக்கு மேல்தான் கள்ளச்சாராய கடத்தல் தொழில் ஆரம்பிக்கும். கள்ளச்சாராயத்தை கார் டயர் டியூப்பில் அடைத்து சாலையோரம் போட்டு சென்றுவிடுவர். கள்ளச்சாராய வியாபாரம் செய்யும் வியாபாரிகள் டியூப்களை எடுத்துச்செல்வர். கார் டியூப்பில் அடைத்து சாலையோரம் போடப்படும் கள்ளச்சாராயத்தை யாராவது திருடுகிறார்களா என்பதை கண்காணிக்க கூட வரதாபாய் தனிப்படை வைத்திருந்தார். இப்படையில் ஓய்வு பெற்ற போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாரும் பணியில் இருந்தனர். வரதாபாயிடமிருந்து நல்ல வருமானம் கிடைத்த காரணத்தால் வரதாபாயிடம் வேலை செய்வதில் போலீஸாரே ஆர்வம் காட்டினர்.

வராதா பாய்
வராதா பாய்

தமிழர்கள் வசிக்கும் தாராவி, சயான், மாட்டுங்கா, கோலிவாடா போன்ற பகுதிகளில் அதிகமாக காலி இடங்கள் இருந்தன. அந்த நிலங்களை ஆக்கிரமிப்பது மற்றும் அவற்றை வேறு ஆட்களிடம் கொடுத்து பணமாக்குவது போன்ற காரியங்களில் வரதாபாய் ஆட்கள் ஈடுபட்டனர். தமிழ் நாட்டில் இருந்து பிழைப்பு தேடி மும்பைக்கு செல்பவர்கள் நேராக வரதாபாயை சென்று சந்திப்பதும் அவர்களுக்கு அவர் வேலை மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்தது. வரதாபாயிடம் உதவி பெற்றவர்களில் சிலர் வரதாபாயிடமே அடியாளாக வேலைக்கு சேர்ந்தனர். அவருடனே இருந்து அவர் சொன்ன வேலைகளை செய்தனர்.

தாராவி

தாராவி போன்ற குடிசைப்பகுதிகளுக்குள் சென்றால் வெளியில் வரமுடியாத அளவுக்கு நெருக்கடியாக இருக்கும். அதோடு எந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியாது. எனவேதான் வரதாபாய் ஆட்கள் அனைவரும் நிலங்களை அபகரித்து அதில் குடிசைகள் அமைத்து பதுங்கி வாழ்ந்தனர். குடிசைப்பகுதிக்குள் போலீசார் நுழைந்துவிட்டால் அது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நபருக்கு அங்கிருப்பவர்கள் மூலம் உடனடியாக சென்றுவிடும். குற்றவாளியின் வீட்டை போலீசார் கண்டுபிடிப்பதற்குள் குற்றவாளி தப்பிச்சென்றுவிடுவார். வரதாபாயிடம் இருந்தவர்கள் மும்பை துறைமுகத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்படும் சரக்குகளை வழியிலேயே திருடிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். வரதாபாய் ஆள் என்று சொன்னால் போலீஸாரும் திருடர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. வரதாபாய் ஆட்கள் சாராயம் கடத்தும் வாகனத்தில் பின் இருக்கையை கழற்றி எடுத்துவிடுவது வழக்கம். பின் இருக்கை கழட்டப்பட்ட வாகனங்களைக் கண்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

தாராவி
தாராவி

தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்களுக்கு வரும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்துவைப்பதில் முதல் ஆளாக வரதாபாய் இருந்தார். தமிழர்களுக்கான நியமிக்கப்படாத நீதிபதியாக இருந்து நீதிக்கான மன்றத்தையே நடத்தி வந்தார். கடத்தல், கள்ளச்சாராயம், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, சினிமா டிக்கெட் விற்பனை, சட்டவிரோத குடிநீர், மின்சார இணைப்பு வழங்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் மத்திய மும்பையில் வரதாபாய் ஆட்கள் செய்து வந்தனர்.

நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே|பகுதி-3

ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் அதிக அளவில் மக்கள் மும்பை நோக்கி பிழைப்பு தேடி வந்து கொண்டிருந்த சமயம் அது. இதனால் சயான், தாராவி, கோலிவாடா, அண்டாப்ஹில், மாட்டுங்கா போன்ற பகுதியில் நாளுக்கு நாள் குடிசைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. இப்படிதான் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக குடிசைகளுள்ள பகுதியாக தாராவி மாறியது.

ஒரு தமிழனின் அதிகாரத்துக்குள் மும்பையின் முக்கியமான பகுதி வரும் காலம் நெருங்கியது.

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு