Published:Updated:

`சம்பவம் தண்ணீல நடந்துருக்கு; நாங்க கேஸ் எடுக்க முடியாது!' -சுற்றுலாப் பயணியை அதிரவைத்த கேரள போலீஸ்

வர்கலா காவல் நிலையம்
வர்கலா காவல் நிலையம்

சுற்றுலா வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைக்காக அந்தப் பெண், வர்கலா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள வர்கலா பீச் பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளார். சில நாள்களாக அங்கு தங்கியிருந்தவர், அங்கு ஒரு பயிற்சியாளரிடம் நீச்சல் கற்றுக்கொண்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, சமீபத்தில் பயிற்சியின்போது அந்தப் பெண்ணை நீச்சல் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்து அந்தப் பெண் சம்பவம் நடந்த உடனேயே, வர்கலா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

representational image
representational image

அங்கு புகாரைச் சொன்னபோது முதலில் எழுத்துபூர்வமாகப் புகாரைத் தரும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி புகாரை பேப்பரில் எழுதிச் சென்றுள்ளார். ஆனால் அதை வாங்குவதற்கு போலீஸார் தாமதப்படுத்தியுள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொள்ளாமல் நான்கு மணிநேரமாக அவரை காவல்நிலையத்துக்கு வெளியே நிற்க வைத்துள்ளனர். காரணம் கேட்டதற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அன்று வர்கலா வந்ததைச் சொல்லி, அவரின் பாதுகாப்பில் பிஸியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Vikatan

அப்போது அங்கிருந்து சென்றவர், மறுநாள் காலையில் மீண்டும் வர்கலா காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். அப்போது, ``இந்தச் சம்பவம் தண்ணீருக்கு அடியில் நடந்ததால், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. நீங்கள் கடலோரக் காவல்துறையிடம் புகார் செய்யுங்கள்" என்று அந்தப் பெண்ணிடம் போலீஸார் கூறியுள்ளனர்.

இரண்டு மணிநேரம் காத்திருந்தும் போலீஸாரிடமிருந்து இப்படி அலட்சியமாக பதில் வந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ``இதுபோன்ற சம்பவம் கேரளாவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. நான் புகார் கொடுத்த நபர் குடும்பஸ்தர் என்பதால் போலீஸார் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவருக்காக என்னிடம் செட்டில்மென்ட் பேச முயன்றனர்" எனக் கூறியுள்ளார்.

வர்கலா காவல் நிலையம்
வர்கலா காவல் நிலையம்

பொது இடங்களை பெண்கள் அணுகக்கூடியதான முயற்சிகளை கேரள அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்கும்வகையில் கேரள அரசு `நைட் வாக்' திட்டத்தைச் செயல்படுத்த முயன்றுள்ள இந்தநேரத்தில் கேரள போலீஸின் இந்தச் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகார் தற்போது அரசின் பார்வைக்குச் சென்றுவிட்டதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு