Published:Updated:

`5 நிமிடத்தில் மூளைச்சலவை; சிறைக்குச் செல்வதற்கு முன் ஏமாந்த காவலர்!’ - சென்னையில் சிக்கிய வியாபாரி

வியாபாரி மணிகண்டன்
வியாபாரி மணிகண்டன்

கடன் வாங்கி ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வியாபாரி, காவலர் ஒருவரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.

சென்னை பொழிச்சலூர் மெயின் ரோடு, பிரேம் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (26). இவர் சலூன் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு பொழிச்சலூரைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் வாடிக்கையாளராக வந்துள்ளார். இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 23.3.2020-ல் சங்கரிடம், கடனாக 10,000 ரூபாயை மணிகண்டன் வாங்கியுள்ளார். அதை திரும்பக் கொடுத்த மணிகண்டன் மீண்டும் சங்கரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை, வேண்டும் என்றால் இந்த மோதிரத்தை அடகு வைத்துக்கொள் என்று சங்கர் கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த மணிகண்டன், மோதிரத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.

விதுஷன்
விதுஷன்

ஊரடங்கு காரணமாக சங்கர், சலூன் கடையைத் திறக்கவில்லை. அதனால் வருமானம் இன்றி அவர் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, மணிகண்டனிடம் மோதிரத்தைத் தரும்படி சங்கர் கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன், தன்னிடம் பணமும் இல்லை மோதிரமும் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டன், தன்னுடைய நண்பன் விதுஷன் (25) என்பவரை அழைத்துக் கொண்டு சங்கரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சங்கரை இருவரையும் இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் சங்கர் படுகாயமடைந்துள்ளார். சங்கரின் உதடு கிழிந்து 2 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் சங்கர். சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி வழக்கு பதிந்து மணிகண்டன், விதுஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் மணிகண்டன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`காய்ச்சல்; கொரோனா பீதி' - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதிய தம்பதி
சங்கர்நகர் காவல் நிலையம்
சங்கர்நகர் காவல் நிலையம்

இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த சங்கர் மற்றும் மணிகண்டன் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அதனால் இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். மணிகண்டன், காய்கறிக் கடை நடத்திவருகிறார். சங்கரிடம் மணிகண்டன் அடிக்கடி கடன் வாங்கி வந்துள்ளார். சங்கரிடம் மட்டுமல்லாமல் மணிகண்டன் இன்னும் சிலரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவந்துள்ளார். மணிகண்டனின் நண்பன் விதுஷன் செல்போன் கடை நடத்திவருகிறார்.

சம்பவத்தன்று மணிகண்டனும் விதுஷனும் இரும்புக் கம்பியால் சங்கரைத் தாக்கியுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மணிகண்டன், விதுஷன் ஆகிய இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். மணிகண்டனை விசாரணைக்காக அழைத்தபோது அவர் வராமல் இழுத்தடித்தார். நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் பிரியாணி வாங்கித் தருகிறோம் என்று கூறி அழைத்தோம். அதை நம்பி காவல் நிலையத்துக்கு வந்த மணிகண்டன் சிக்கிக் கொண்டார்" என்றனர்.

மணிகண்டன்
மணிகண்டன்
`நேற்று அட்மிட்; இன்று விபரீத முடிவு!’ - சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அதிர்ச்சி

மணிகண்டனிடம் போலீஸார் விசாரித்தபோது, `நான் 5 நிமிஷம் ஒருவரிடம் பேசினால் அவரை எளிதாக மூளைச் சலவை செய்துவிடுவேன். அப்படித்தான் சங்கரிடம், காய்கறிக் கடை வைக்க பணம் வாங்கினேன். சங்கரைப் போல பலரிடம் பணம் வாங்கியுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்துக்கு போலீஸார் மணிகண்டனை அழைத்துச் செல்வதற்கு முன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலரிடம் `சார்... எனக்கு அவசரமாக 500 ரூபாய் தேவைப்படுகிறது' என்று கடன் கேட்டுள்ளார். மணிகண்டனின் பேச்சில் மயங்கிய காவலரும் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்வதில் மணிகண்டன் கில்லாடி என்கிறார்கள் காவலர்கள்!

அடுத்த கட்டுரைக்கு