Published:Updated:

தொழில் பகை; சித்தப்பாவை நண்பனோடு சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞர்! - கோவில்பட்டியில் பயங்கரம்

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சைக்கிள் ஸ்டாண்டு நடத்திவந்தவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், அவரின் அண்ணன் மகன் உட்பட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

தொழில் பகை; சித்தப்பாவை நண்பனோடு சேர்ந்து வெட்டிக் கொன்ற இளைஞர்! - கோவில்பட்டியில் பயங்கரம்

கோவில்பட்டியில் சைக்கிள் ஸ்டாண்டு நடத்திவந்தவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், அவரின் அண்ணன் மகன் உட்பட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கோவில்பட்டி

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு சக்கர வாகனக் காப்பகத்தை கோவில்பட்டி நகராட்சியில் குத்தகைக்கு எடுத்து நடத்திவந்திருக்கிறார். இவர் இரவில் வாகனக் காப்பகத்திலேயே தூங்குவது வழக்கமாம். இந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) அதிகாலை சுமார் 3 மணியளவில் ஒரே பைக்கில் வந்த இரண்டு பேர், தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தராஜின் முகத்தில் மிளகாய்ப்பொடியை தூவியிருக்கின்றனர்.

கொலைசெய்யப்பட்ட ஆனந்தராஜ்
கொலைசெய்யப்பட்ட ஆனந்தராஜ்

உடனே கண்ணைத் துடைத்துக்கொண்டு விழிக்க முயன்ற நேரத்தில், அவரை அந்தக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் ஆனந்தராஜ் உயிரிழந்தார். வெளியூர்களுக்குச் செல்பவர்கள் வழக்கமாக வாகனக் காப்பகத்தில் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக வந்தபோது, ஆனந்தராஜ் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

வாகனக் காப்பகத்திலுள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். பைக்கில் வந்த இருவர் குறித்து விசாரணை நடத்தியதில் ஆனந்தராஜைக் கொலைசெய்தது, அவரின் அண்ணன் மகன் சுந்தர்ராஜின் மகன் கமலேஷ், மதுரையைச் சேர்ந்த அவரின் நண்பர் 17 வயது சிறுவன் ஆகியோர்தான் எனத் தெரியவந்தது. அதையடுத்து, இருவரையும் சாத்தூரில் தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர். கொலைக்கான காரணம் குறித்து கமலேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், “எங்க சித்தப்பா ஆனந்தராஜ் நடத்திட்டுவந்த சைக்கிள் ஸ்டாண்டை ஒரு வருஷத்துக்கு முன்னால எங்க அப்பா சுந்தர்ராஜ்தான் நடத்திட்டுவந்தார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

இந்த வருஷம் கூடுதல் பணத்துக்குக் குத்தகைக்கு எடுத்து சித்தப்பா ஆனந்தராஜ் சைக்கிள் ஸ்டாண்டை நடத்திட்டுவந்தார். இதனால எங்க அப்பாவுக்குச் சரியான தொழிலோ வருமானமோ இல்லாமப் போச்சு. இதனால எங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் மோதல் வந்துச்சு. எங்க அப்பாவுக்குத் தொழில் இல்லாம போனதுக்கு சித்தப்பாதான் காரணம்ங்கிறதுனால என்னோட நண்பரோடச் சேர்ந்து கொலைசெஞ்சேன்” எனக் கூறி அதிரவைத்திருக்கிறார்.