Published:Updated:

ஓடிய விலங்கு; குறி தவறிய குண்டு!- வேட்டைக்குச் சென்ற நண்பர்களால் வேலூர் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

துஷ்வேந்தன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ராசிமலை காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.

உயிரிழந்த சிறுவன் துஷ்வேந்தன்
உயிரிழந்த சிறுவன் துஷ்வேந்தன்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேல் அரசம்பட்டு பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மூத்த மகன் துஷ்வேந்தன் (16). தந்தை இறந்துவிட்டதால், தாயின் கண்காணிப்பில் இருந்த இந்தச் சிறுவன், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேல் படிப்பைத் தொடரவில்லை. 

சடலம்
சடலம்

இந்தநிலையில், துஷ்வேந்தன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ராசிமலை காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அங்கேயே டென்ட் அடித்துத் தங்கி வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். 

அப்போது, ஒரு விலங்கு ஓடியதைப் பார்த்த அந்தக் கும்பல் நாலாப் பக்கமும் பிரிந்து சென்று வேட்டையாட முயன்றனர். அவர்களில் 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் அந்த விலங்கைச் சுட முயன்றார். குறி தவறி எதிரே இருந்த துஷ்வேந்தன் மீது குண்டுகள் பாய்ந்தன. 

துஷ்வேந்தன்
துஷ்வேந்தன்

தலையில் குண்டு துளைத்ததால் சம்பவ இடத்திலேயே துஷ்வேந்தன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், சம்பவத்தை மறைக்கத் திட்டமிட்டு சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். விவகாரம் ஊருக்குள் கசிய ஆரம்பித்தது.

துப்பாக்கியால் சுட்ட சிறுவன் அச்சமடைந்து, வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வேப்பங்குப்பம் காவல் நிலையம்
வேப்பங்குப்பம் காவல் நிலையம்

மேலும், துஷ்வேந்தனின் தாய் கோமதி கொடுத்த புகாரின் பேரில் சரணடைந்த சிறுவன் மற்றும் மனோகரன் (32) ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்தனர். தப்பி ஓடிய மேலும் நான்கு பேரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.