Published:Updated:

வேலூர்: `சி.எம்.சி மருத்துவ சீட்; ரூ.57 லட்சம் மோசடி!’ - பாதிரியார் உட்பட 3 பேர் கைது

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில், மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த கிறிஸ்தவ பாதிரியார் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காரணைப்புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். அபுதாபியில் மெக்கானிக்கல் இன்ஜினீயராகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மகன் ஈஸ்வர், 2017-ம் ஆண்டு நடந்த `நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றார். மதிப்பெண் குறைவாக இருந்ததால், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் `சீட்’ கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனிவாசன், வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு வந்தார். அங்கு மருத்துவ சீட் சம்பந்தமாக யாரை அணுகுவது என்று விசாரித்திருக்கிறார். சி.எம்.சி-யில் இருந்த சிலர், வேலூர் சி.எஸ்.ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்த சாதுசத்தியராஜ் என்பவரைப் பார்க்குமாறு கூறியிருக்கிறார்கள். சீனிவாசனும், அந்த பாதிரியாரைச் சந்தித்திருக்கிறார்.

சி.எம்.சி மருத்துவக்கல்லூரி
சி.எம்.சி மருத்துவக்கல்லூரி

பாதிரியார் சாதுசத்தியராஜ், ``காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரான தேவா என்கிற தேவகுமாரையும், அவருடைய தம்பி அன்புகிராண்டையும் போய்ப் பாருங்கள். அவர்கள் சொல்வதுபோல் நடந்துகொண்டால், உங்கள் மகனுக்குக் கண்டிப்பாக `சீட்’ கிடைத்துவிடும்’’ என்று கூறியிருக்கிறார். அதன்படி, இருவரையும் சீனிவாசன் சந்தித்தார். அப்போது அவர்கள், ``சி.எம்.சி-யில் மெடிக்கல் சீட் வாங்கித் தர வேண்டுமெனில், 57 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று பேரம் பேசியிருக்கிறார்கள். மகனை மருத்துவராக்க ஆசைப்பட்ட சீனிவாசன், அவர்கள் கேட்ட பணத்தைத் தவணை முறையில் வங்கிக் கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்திருக்கிறார்.

ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் சீட் வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் பாதிரியார் உட்பட மூன்று பேரும் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். பணத்தைத் திருப்பிக் கேட்ட சீனிவாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இது குறித்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமாரிடம் சில தினங்களுக்கு முன்னர் சீனிவாசன் புகார் மனு அளித்தார். இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

விசாரணையில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக பாதிரியார் சாதுசத்தியராஜ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் தேவா, இவரின் தம்பி அன்புகிராண்ட் ஆகிய மூன்று பேரும் மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து, போலீஸார் மூவரையும் கைதுசெய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இவர்களில், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் தேவா மீதும் அவருடைய தம்பி மீதும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேவா, ரௌடிகள் பட்டியலிலும் இருக்கிறார். கடந்த மே மாதம், சட்ட விரோதமாக கைத்துப்பாக்கியை விற்ற வழக்கிலும், தேவா கைதுசெய்யப்பட்டார். `ஜாமீனில் வெளிவந்த சூழலில், மோசடிப் புகாரில் அவர் மீண்டும் சிறைச் சென்றிருக்கிறார்’ என்கிறது வேலூர் காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு