Published:Updated:

ரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்!
ரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்!

விழிபிதுங்கவைக்கும் வேலூர் வில்லங்கம்

பிரீமியம் ஸ்டோரி
`சாமியார்களையும் சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது’ என்று எழுதி எழுதி அலுத்துப்போய்விட்டது. இப்போது, வேலூரில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தேவாலயத்துக் குள்ளேயே அடிதடி, கட்டப் பஞ்சாயத்து செய்து சிறைக்குள் கம்பி எண்ணுகிறார். இவரைக் கைதுசெய்து கம்பிக்குள் அடைப்பதற்குள், இன்னொரு பக்கம் இந்து சாமியார் ஒருவர் பணமோசடி, ஆண்களிடம் பாலியல் அத்துமீறல் என்று அதகளப்படுத்தவே... அவரையும் பிடித்து சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்!

ரௌடியை இயக்கிய பாதிரியார்!

வேலூர், அண்ணா சாலையிலுள்ள சி.எஸ்.ஐ மத்திய தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் சாதுசத்தியராஜ். மதத்தின் பெயரால் பல்வேறு மோசடிகளில் இவர் ஈடுபட்டுவந்ததாக இவர்மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் வரிசைகட்டின. போதாததற்கு, ரெளடிகள் சகவாசம் வேறு. இவைதான் இவரைச் சிறைக்குள் தள்ளியிருக்கின்றன. இவரது மோசடிகளைப் பற்றி நன்கறிந்த சிலர் நம்மிடம் பேசினார்கள்.

‘‘ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்ற தேவா என்பவருக்கும் சாதுசத்தியராஜுக்கும் மிகவும் நெருக்கம். இருவரும் கைகோத்து பணமோசடி, உருட்டல், மிரட்டல் என தேவாலயத்தையே களங்கப்படுத்திவிட்டார்கள். ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின், வேலூர் மாவட்டச் செயலாளராக பொறுப்புவகிக்கிறார் தேவா. நீண்ட தாடி, கூந்தல் பின்னும் அளவுக்குத் தலைமுடியுடன் தோற்றமளிக்கும் தேவா, சொகுசு காரில்தான் வலம்வருவார். இவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்.

ரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்!

2018-ம் ஆண்டு, ஜூலை மாதம் தேவாலயத்தில் பாதிரியாரை எதிர்த்து சிலர் கேள்வி கேட்டார்கள். உடனே, தேவா தலைமையிலான ரெளடிக் கும்பலை தேவாலயத்துக்குள்ளேயே வரவழைத்து தாக்குதல் நடத்தினார் சாதுசத்தியராஜ். அப்போது பாதிரியார் எதுவும் தெரியாததுபோல ஒதுங்கிக்கொள்ள... தேவாவைக் கைதுசெய்த போலீஸார் அவரது காரிலிருந்து கைத்துப்பாக்கி, கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேவாவை ஜாமீனில் எடுத்து அடைக்கலம் கொடுத்துவந்தார் பாதிரியார். கடந்த மே மாதம், சட்ட விரோதமாகக் கைத்துப்பாக்கியை விற்ற வழக்கிலும் தேவா கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகும் இவர்களின் ஆட்டம் அடங்கவில்லை. வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும், வேலையில் சேர்த்துவிடுவதாகவும் தேவாலயத்துக்கு வரும் பக்தர்களிடம் இருவரும் பணம் வசூல் செய்து, ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களின் ரெளடியிசத்தால் பயந்துபோன பலரும் இது பற்றிப் புகாரளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், இவர்களிடம் 57 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மட்டுமே தைரியமாக வேலூர் எஸ்.பி செல்வகுமாரிடம் புகாரளித்தார்” என்றார்கள்.

தொடர்ந்து போலீஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘‘சீனிவாசனின் மகன் 2017-ம் ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெற்றார். மதிப்பெண் குறைவாக இருந்ததால், நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் பெறுவதற்காக சி.எம்.சி-க்கு சென்றிருக்கிறார். அங்கு சில ஏஜென்ட்டுகள், சாதுசத்தியராஜைப் பார்க்கும்படி அனுப்பிவைத்திருக்கிறார்கள். சீனிவாசனிடம் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பேரம் பேசி 57 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டார் சாதுசத்தியராஜ். மூன்று ஆண்டுகளாகியும் சீட் வாங்கித் தரவில்லை. சீனிவாசன் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு, ரௌடி தேவா மூலமாகக் கொலை மிரட்டல்விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் போலீஸில் புகாரளிக்கவே... பாதிரியார் சாதுசத்தியராஜ், ரௌடி தேவா, தேவாவின் தம்பி அன்பு கிராண்ட் ஆகிய மூவரையும் கைதுசெய்து, வேலூர் மத்தியச் சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்கள்.

ரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்!

ஆண் பக்தர்களிடம் சில்மிஷம்!

பாதிரியார் இப்படி அடிதடி, ரெளடியிசம் என்று அதகளப்படுத்தினார் என்றால், இன்னொரு பக்கம் இதே வேலூரில் திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்த ‘சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார், பண மோசடி, பாலியல் அத்துமீறல் சர்ச்சைகளில் சிக்கியிருக் கிறார்.

சாமியாரின் மோசடிகளைப் பற்றியும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். ‘‘சாந்தா சுவாமியின் இயற்பெயர் சாந்தகுமார். அரசுப் பணியிலிருந்தவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை உதறிவிட்டு புரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்குச் சேவை செய்துவந்தார். அவருடன் ஏற்பட்ட உரசலால் விலகி வந்து, தனியாக மடம் ஆரம்பித்துவிட்டார். பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள் பலருடனும் சாந்தா சாமியார் நட்பு பாராட்டியதால் பிரபலமடைந்தார்; செல்வாக்கும் கூடியது.

இதற்கிடையே, பெங்களூரைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவருடன் சாந்தா சாமியாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார் சாந்தா சாமியார். பணப்புழக்கம் அதிகரித்தது. தன்னைத் தேடிவரும் பக்தர்களில், வசதியானவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபட்டார். ‘பெங்களூரில் எனக்குத் தெரிந்த முக்கியப் பிரமுகர் இருக்கிறார். அவருடன் இணைந்து பிசினஸ் செய்கிறேன். நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்புப் பணம் கிடைக்கும்’ என்று பக்தர்களிடம் பணத்தாசை காட்டியிருக்கிறார். இதை நம்பி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பக்தர்கள் 65 லட்சம் ரூபாயை சாந்தா சாமியாரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட சாமியார் சில மாதங்கள் கழித்து, ‘என் பார்ட்னர் ஏமாற்றிவிட்டார். உங்கள் பணத்தை எப்படியாவது புரட்டி நானே கொடுத்துவிடுகிறேன்’ என்று நாடகமாடியிருக் கிறார். பணத்தை இழந்த நால்வரும் பல மாதங்களாக அலைந்தும் பணம் கிடைத்தபாடில்லை. ஒருகட்டத்தில் பணம் கேட்டவர்களிடம், சூனியம் வைத்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்’’ என்றார்கள்.

பாதிக்கப்பட்ட நால்வரும் ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனைச் சந்தித்து, புகாரளித்தனர். இதையடுத்து, நவம்பர் 7-ம் தேதி சாந்தா சாமியாரைக் கைதுசெய்த போலீஸார், அரக்கோணம் கிளைச்சி றையில் அடைத்துள்ளனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த கமலக்கார ரெட்டியையும், ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை புனிதவள்ளியையும் போலீஸார் தேடிவருகிறார்கள். ‘‘சாமியாரிடம் பணத்தை இழந்த பக்தர்கள் இன்னும் பலர் இருக்கலாம். அவர்களும் புகாரளிக் கலாம்’’ என்று தெரிவித்திருக்கிறது போலீஸ்.

இப்படி பணமோசடி புகார் மட்டுமல்லாமல், சாந்தா சாமியார்மீது பாலியல் சர்ச்சையும் எழுந்திருக்கிறது. ஆண் பக்தர்களிடம் சாமியார் பாலியல் சீண்டல்களைச் செய்ததாகச் சொல்கிறார்கள். இது குறித்தும் நம்மிடம் பேசியவர்கள், ‘‘ஃபேஸ்புக் பக்கத்தில், தன்னைப் பின்தொடரும் ஆண் பக்தர்களிடம், ‘மெசஞ்சர்’ செயலி மூலமாக சாட்டிங் செய்து, அவர்களுக்குப் பாலியல்ரீதியாக அழைப்புவிடுத்திருக்கிறார். சாட்டிங்கில் தன்னுடைய ஆபாசப் படத்தையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதனால் பக்தர்கள் பலரும், தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் சாமியாரை ‘பிளாக்’ செய்துவிட்டார்கள்’’ என்றார்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... முடியலைடா ‘சாமி’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு