Published:Updated:

`அந்தப் பொண்ணுகூட ரகசியமா குடும்பம் நடத்துறாரு!’ - சிஆர்பிஎஃப் வீரர் மீது புகார் கொடுத்த மனைவி

தர்ணாவில் ஈடுபட்ட கவிதா
தர்ணாவில் ஈடுபட்ட கவிதா

இரண்டாவது திருமணம் செய்து, ரகசியமாக குடும்பம் நடத்திவரும் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியைச் சேர்ந்தவர், கவிதா. இவருக்கும் காட்பாடி காங்கேயநல்லூர் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அரவிந்தன்
அரவிந்தன்

அரவிந்தன், கொல்கத்தாவில் சிஆர்பிஎஃப் படைப் பிரிவில் வீரராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடமிருந்து அரவிந்தன் திடீரென விலகியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கவிதாவுக்குத் தெரியாமல் கனிமொழி என்பவரை அரவிந்தன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போதுதான் கவிதாவுக்குத் தெரியவந்துள்ளது.

புகார் கொடுத்த கவிதா
புகார் கொடுத்த கவிதா

காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று, கணவன் மற்றும் அவரின் இரண்டாவது மனைவியைக் கைதுசெய்யக் கோரி புகார் மனு அளித்தார். புகாரை ஏற்க மறுத்த போலீஸார், டிஎஸ்பி-யை சந்திக்குமாறு அனுப்பிவைத்தனர்.

டிஎஸ்பி-யும் புகாரைப் பெறாததால் ஆத்திரமடைந்த கவிதா, தன் உறவினர்கள் சிலருடன் வேலூர் எஸ்பி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அந்த நேரம் பார்த்து, எஸ்பி பிரவேஷ்குமார் வந்ததால் பதறிப்போன போலீஸார், கவிதாவிடம் கடிந்துகொண்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட கவிதா
தர்ணாவில் ஈடுபட்ட கவிதா

அப்போது அவர், ‘‘எனக்கே தெரியாமல் வேறொரு பெண்ணுடன் இரண்டு வருஷமா குடும்பம் நடத்தும் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார். அவரிடமிருந்து புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பிவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு