Published:Updated:

` கட்சிப் பணியோடு செம்மரம் கடத்தல்!' -சாந்தபிரியா கொலை வழக்கில் சிக்கிய வாணியம்பாடி தி.மு.க புள்ளி

தி.மு.க பிரமுகர் பி.எம்.முனிவேல்
தி.மு.க பிரமுகர் பி.எம்.முனிவேல்

செம்மரக் கடத்தலில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாணியம்பாடியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (28). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா அவரின் தம்பி இளைய குமார், அசோகன், மற்றுமொரு பழனி ஆகியோர் சேர்ந்து ஆந்திராவுக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சாந்தபிரியா
கொலை செய்யப்பட்ட சாந்தபிரியா

செம்மரங்களை விற்பனை செய்த பணத்தைப் பங்கு பிரித்ததில் சீனிவாசனே அதிக பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த கூட்டாளிகள் கடந்த 3-ம் தேதி சீனிவாசனின் வீட்டுக்குள் புகுந்து அவரையும் குடும்பத்தினரையும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர்.

சீனிவாசனின் தந்தை நாராயணன் (50), தாய் மல்லிகா (48), மனைவி சாந்தபிரியாவையும் (25) அடித்து உதைத்த அந்தக் கும்பல் சீனிவாசனின் குழந்தை கோமதியையும் தாக்கியது. சீனிவாசனைக் கடத்திச்சென்றபோது அவரின் மனைவி சாந்தபிரியா தடுக்க முற்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல்
கைதுசெய்யப்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல்

அவரின் கழுத்தை நெரித்தும் சுவரில் தலையை முட்டியும் கொடூரமாக கொலைசெய்தது அந்தக் கும்பல். இந்தச் சம்பவத்தையறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ஒடுகத்தூர் அருகே கடத்தல் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளைக் கைப்பற்றினர். மேலும், இளம்பெண் கொலை தொடர்பாக செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39), பழனி (31), இளையராஜா (31) உள்பட 6 பேரை தேடிப்பிடித்துக் கைதுசெய்தனர். வெங்கடேசன் என்பவர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தி.மு.க பிரமுகர் பி.எம்.முனிவேல்
தி.மு.க பிரமுகர் பி.எம்.முனிவேல்
அவைத்தலைவர் முனிவேல் கட்சிக்கு விசுவாசமானவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாகக் கட்சிக்காகவே உழைத்தவர்.
முத்தமிழ்ச் செல்வி

இந்த வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் பி.எம்.முனிவேல் (50) தான் முக்கியக் குற்றவாளி என்பது தெரியவந்தது. அதையடுத்து, முனிவேலையும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தி.மு.க பிரமுகர் மீதான கைது நடவடிக்கை குறித்து வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச் செல்வியிடம் பேசினோம். `` அவைத்தலைவர் முனிவேல் கட்சிக்கு விசுவாசமானவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலமாகக் கட்சிக்காகவே உழைத்தவர். அவரின் கைது நடவடிக்கைக்குப் பின்னால் சரியான புலன் விசாரணை இல்லை என்றே பலர் கூறுகிறார்கள். அந்த விவகாரம் குறித்தும் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு