Published:Updated:

வேலூர்:`தீபாவளி வசூல் வேட்டை!’ - விஜிலென்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கிய அதிகாரி

ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்
ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்

வேலூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்துக்குள் நேற்று மாலை அதிரடியாக நுழைந்த வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மெயின் கேட்டை இழுத்துப் பூட்டினர். இதையடுத்து, அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநரின் அறைக்குள்ளும் சென்று சோதனை நடத்தினர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்

இந்தச் சோதனையில், உதவி இயக்குநர் செந்தில்வேலின் அறை, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார், அங்கு வந்திருந்த கான்ட்ராக்டர் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத 92,000 ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், முறைகேடு நடந்திருப்பதற்கான சில முக்கிய கோப்புகளையும் கைப்பற்றியுள்ளனர்.

வேலூர்: `வீடு முழுக்க கட்டுக்கட்டாகப் பணம், தங்க நகைகள்!’ - மலைக்கவைத்த லஞ்ச அதிகாரி

இது தொடர்பாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேலிடம் நள்ளிரவு வரை கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னரே, அலுவலகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றியது தொடர்பாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றனர்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்
ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில்,`அன்பளிப்பு’ என்ற பெயரில் அரசுத்துறை அலுவலர்கள் பலரும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை லஞ்சமாகப் பெறுகிறார்கள். அது போன்ற அலுவலர்களை ரகசியமாகக் கண்காணித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வளைத்துப் பிடிக்கிறார்கள். அந்த வகையில்தான், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேலனையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து, கொத்தாகத் தூக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு