Published:Updated:

`இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி

லஞ்சம் பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்
லஞ்சம் பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியபோது, `தெரியாம தப்பு பண்ணிட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க சார்...’ என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினார், திருவலம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்.

வேலூர் மாவட்டம், திருவலம் பேரூராட்சியின் செயல் அலுவலராக இருப்பவர் வெங்கடேசன். இவர் வரிவிதிப்பு, கட்டட அனுமதி ஆகியவற்றுக்கு அதிக பணம் வசூலித்து, குறைந்த அளவுக்கு பில் போடுவதாகப் புகார் எழுந்தது. அதுமட்டுமன்றி, இல்லாத கம்பெனிகளிலிருந்து பேரூராட்சிக்குத் தேவையான பல்வேறு பொருள்களை வாங்கியதாக போலி கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுவந்ததாகவும் அடுக்கடுக்காகப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலர் வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை
பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை

ஆனால், பணம் செலவழித்து சிபாரிசு மூலமாக மீண்டும் திருவலத்துக்கே வந்துவிட்டார் என்கிறார்கள். செயல் அலுவலர் வெங்கடேசன் மீது மீண்டும் முறைகேடுப் புகார் கூறப்பட்டதால், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, செயல் அலுவலர் வெங்கடேசன், எழுத்தர் துரை ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத சுமார் 52,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

வேலூர்: `வீடு முழுக்க கட்டுக்கட்டாகப் பணம், தங்க நகைகள்!’ - மலைக்கவைத்த லஞ்ச அதிகாரி

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்மீது தொடர்ச்சியான புகார்கள் வந்ததால், இந்தச் சோதனையை நடத்தியிருக்கிறோம். கணக்கில் வராத பணமும், முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான நிறைய ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறோம். விசாரணையின்போது,`இனி லஞ்சம் வாங்க மாட்டேன், தெரியாமல் தப்பு பண்ணிட்டேன். இந்த ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க சார்...’ என்று செயல் அலுவலர் வெங்கடேசன் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினார். அவர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றனர்.

டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட சோதனை
டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட சோதனை

இதேபோல், வேலூரிலுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதிக அளவில் வருமானம் ஈட்டக்கூடிய வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை வரை சோதனை நடத்தினர். அரசு விடுமுறைக்கு முந்தைய நாளில், பிளாக் மார்க்கெட்டில் மதுபானங்களை மொத்தமாக விற்பதும், நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்கண்ட மூன்று டாஸ்மாக் கடைகளிலிருந்தும் கணக்கில் வராத 61,000 ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனைகளால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. டாஸ்மாக் கடை ஊழியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு