Published:Updated:

வேலூர்: `லஞ்சம் வாங்கத் தனி அலுவலகம்!’ - சுற்றுச்சூழல் அதிகாரி சிக்கியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லஞ்சம் வாங்க தனி அலுவலகம் - பன்னீர்செல்வம்
லஞ்சம் வாங்க தனி அலுவலகம் - பன்னீர்செல்வம்

வேலூரில், சுற்றுச்சூழல் அதிகாரியிடமிருந்து ரூ.33.73 லட்சம் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். விசாரணையில், லஞ்சம் பெறுவதற்காகவே அந்த அதிகாரி வீட்டை வாடகைக்கு எடுத்து, தனி அலுவலகம் நடத்திவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வேலூர் காட்பாடியில், மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (51) என்பவர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது கட்டுப்பாட்டின்கீழ் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. புதிய கம்பெனி தொடங்குவதற்கும், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும் `அப்ரூவல்’ தருவதற்கான அதிகாரம் இவரிடம்தான் இருக்கிறது. இந்தநிலையில், மாதந்தோறும் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி அவர்கள் கொண்டுவரும் கோப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க முறைகேடாக லட்சக்கணக்கில் பணம் பெறுவதாக பன்னீர்செல்வம்மீது புகார் எழுந்தது.

கைப்பற்றப்பட்ட பணம்
கைப்பற்றப்பட்ட பணம்

இதையடுத்து, சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாகப் பிடிக்க வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளையும் கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். இந்தச் சூழலில், காட்பாடியிலுள்ள அலுவலகத்தில் மாதாந்தர ஆய்வுக்கூட்டம் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மாவட்ட அலுவலர்கள் கோப்புகளுடன் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், முறைகேடாகப் பணப் பரிமாற்றம் நடக்கவிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் சென்றது.

சீர்காழி: மீனவர்களுக்கான கிசான் அட்டை வழங்குவதற்கு லஞ்சம்... சிக்கிய மீன்வளத்துறை அதிகாரி!

அவர்களும் சாதாரண உடையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் கூட்டம் முடிந்துவிட்டது. கோப்புகளை எடுத்துக்கொண்டு பன்னீர்செல்வம் தனது அலுவலக காரில், காட்பாடி காந்தி நகரிலுள்ள முனிசிபல் காலனிக்குள் சென்று காரை நிறுத்திவிட்டு ஒரு வீட்டுக்குள் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரும், அதிரடியாக அந்த வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். இதை எதிர்ப்பார்க்காத சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் செய்வதறியாமல் திகைத்துப்போனார். இந்தச் சோதனையில், கணக்கில் வராத 33.73 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

தனி அலுவலகம்
தனி அலுவலகம்

மேலும், முறைகேடாகப் பணம் பெற்றிருப்பதற்கான 11 ஆவணங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக, நேற்றிரவு முதல் விடிய விடிய பன்னீர்செல்வத்திடம் விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் முறைகேடாக லஞ்சம் பெறுவதாகத் தகவல் கிடைத்தது. அவரைக் கண்காணித்த பின்னரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். பன்னீர்செல்வத்தின் வீடு ராணிப்பேட்டையில் இருக்கிறது. பணம் கைப்பற்றப்பட்டிருக்கும் முனிசிபல் காலனியிலுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, தனி அலுவலகமாகவே நடத்திவந்திருக்கிறார். லஞ்சப் பணத்தை இங்குதான் பதுக்கிவைத்திருக்கிறார். பன்னீர்செல்வம் மீது ஆய்வுக்குழு அலுவலர் புகார் கொடுப்பார். அதன்பேரில், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு