Published:Updated:

`பறிமுதல் வெல்லம்;சாராயக் கும்பலிடமே விற்பனை!’- டி.ஐ.ஜி விசாரணையில் சிக்கிய வேலூர் பெண் இன்ஸ்பெக்டர்

சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்
சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்

பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் வெல்லத்தைச் சாராயக் கும்பலிடமே பேரம் பேசி விற்ற பெண் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் பத்து நாள்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றார். இதனால், வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி அந்தக் காவல் நிலையப் பணிகளையும் சேர்த்துக் கவனிக்கக் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், வேப்பங்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைப் பலர் குடிசைத் தொழிலாகச் செய்துவருவதாகவும் இதற்காகக் காவல் துறையினருக்கு மாமூல் கொடுக்கப்படுவதாகவும் இன்ஸ்பெக்டர் லட்சுமியின் கவனத்துக்குத் தகவல் வந்தது.

சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்
சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்

கள்ளச்சாராயக் கும்பலை வேட்டையாட இன்ஸ்பெக்டர் களத்தில் இறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். மாறாக, மாமூல் வாங்கும் காவல்துறையினர் மூலம் சாராயக் கும்பலின் பட்டியலைச் சேகரித்துப் பெரும் தொகையைத் தனக்கு மாமூலாகக் கொடுக்குமாறு பேரம் பேசி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய், சாராயக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் வெல்லத்தை அவர்களிடமே இன்றைய மார்க்கெட் விலைக்குப் பேரம் பேசி 1,40,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டரின் மாமூல் வேட்டை குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி காமினிக்கு ரகசியமாகப் புகார் சென்றது. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க உளவுத்துறைக்கு டி.ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரணையில், சட்ட விரோதக் கும்பலிடம் தொடர்பு வைத்துக்கொண்டு வெல்லம் விற்றது உறுதியானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் லட்சுமியை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி அதிரடியாக உத்தரவிட்டார். தொடர்ந்து, வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு ஏட்டுகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்
சாராய ஊறல்களையும் பொருள்களையும் அழித்த போலீஸார்

முறைகேடு தொடர்பாகப் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி காவலர்கள் குறித்தும் உளவுத்துறை மூலம் டி.ஐ.ஜி காமினி ரகசியமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

அடுத்தகட்ட நடவடிக்கையில், மேலும் சில பெண் இன்ஸ்பெக்டர்கள் சிக்கப் போகிறார்கள் என்று காவல்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். டி.ஐ.ஜி-யின் இந்த அதிரடியால் மாமூல் காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு