Published:Updated:

வேலூர்: `அன்புள்ள அப்பாவுக்கு செல்ல மகள் எழுதுவது!’-விபரீத முடிவெடுத்த புதுப்பெண்

Representational Image
Representational Image

``நீ ரொம்ப அழகா இருக்கே. நீ யாரையும் லவ் பணணினது கிடையாதானு கேட்டு சந்தேகப்படுறான். அவன்கூட இனியும் வாழ முடியாது’’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மணமான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரை அடுத்த அரியூர் கோவிந்தரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மகள் சந்திரலேகா. பட்டதாரிப் பெண்ணான சந்திரலேகாவுக்கும், காட்பாடி பிரம்மபுரத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரான பாலாஜி என்பவருக்கும் கடந்த மாதம், 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்துவைத்த சந்தோஷத்தில் புகுந்த வீடு சென்ற சந்திரலேகா, மறுவீடு சடங்குக்காக கணவருடன் பிறந்த வீட்டுக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை வந்தார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டு முதல் மாடியிலுள்ள குளியல் அறைக்குச் சென்ற சந்திரலேகா திடீரென தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

கணவர் பாலாஜி
கணவர் பாலாஜி

அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிச் சென்று, கதவை உடைத்து பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், பரிதாபமாக மரணடைந்தார். திருமணம் ஆன எட்டாவது நாளில், சந்திரலேகா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் கதறியழுதனர். சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் தாய் அரியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார், சந்திரலேகா தங்கியிருந்த அறைக்குச் சென்று சோதனையிட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. தன்னை தற்கொலைக்குத் தள்ளிய காரணம் குறித்து சந்திரலேகா எழுதிவைத்திருந்த கடிதம் சிக்கியது.

``அன்புள்ள அப்பாவுக்கு உங்கள் செல்லமகள் எழுதுவது...’ என்று தொடங்கியிருந்த அந்தக் கடிதத்தில்,``என்னை மன்னிச்சிடுங்க அப்பா. நான் ஆசையாகக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால், முதல் இரவிலேயே அவன் நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கலை. அசிங்கமாப் பேசுறான். அதுல இருந்து அவனை எனக்குச் சுத்தமா பிடிக்கலை. `நீ ரொம்ப அழகா இருக்கே, நீ யாரையும் லவ் பணணினது கிடையாதா’னு கேட்டு சந்தேகப்படுறான். அப்புறம், `என்னைப் பிடிக்கலையா, என்னை விட்டுட்டு போயிடுவியா’னு கேட்டு வெறுப்பேத்துறான். அவங்க அப்பாவே குழந்தையா வந்து பிறக்கணும்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்றான். என் உடம்பு மட்டும்தான் அவனுக்கு வேணும். மத்தபடி பாசமா பேசினதுகூடக் கிடையாது.

சந்திரலேகா
சந்திரலேகா

அவன் செய்யிற கொடுமயை உங்ககிட்ட சொன்னா, `கௌரவம் போயிடும். எப்படி இருந்தாலும் பொறுத்துகிட்ட வாழு’னு சொல்றீங்க. அம்மாகிட்டேயும் சாரி கேட்டுக்கிறேன். தங்கைக்காவது நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் பண்ணிவைங்க. இவனை மாதிரி பார்க்காதீங்க. நான் செத்த பிறகு உங்களுக்கு நல்ல வழிகாட்டியா இருப்பேன். அடுத்த ஜென்மம் இருந்தா, உங்களுக்குத்தான் மகளாகப் பிறக்கணும். அடுத்த ஜென்மத்துலேயும் இந்த மாதிரி ஒருத்தனைப் பார்க்கவே கூடாதுனு வேண்டிக்கிறேன். ஐ லவ் யூ அப்பா... ஐ மிஸ் யூ அப்பா. கண்டிப்பா சித்தப்பா, சித்திக்கு பையனாக வந்து பிறப்பேன்’’ என்று துன்பங்களைக் கொட்டியிருக்கிறார் சந்திரலேகா. இந்தக் கடிதத்தை வைத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு