Election bannerElection banner
Published:Updated:

வேலூர்: `மனைவி, மாமியார்தான் காரணம்!’ -தூக்குக்கயிற்றுடன் வீடியோ பதிவிட்ட பெயின்டர்

தூக்கு கயிறுடன் அஜய்குமார்
தூக்கு கயிறுடன் அஜய்குமார்

‘என் தற்கொலைக்கு மனைவியும் மாமியாரும்தான் காரணம்’ என்று செஃல்பி வீடியோவில் பதிவிட்டு பெயின்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் அஜய்குமார் (30), பெயின்டர். இவரும் அருகில் உள்ள சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரின் மகள் அர்ச்சனாவும் காதலித்து வந்தனர். பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த மே மாதம் 8-ம் தேதி, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, கீழ்மொணவூரில் வாடகைக்கு வீடு எடுத்து காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தத் தொடங்கினார் அஜய்குமார். இந்த நிலையில், திருமணமான மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வேலூர்
வேலூர்

மனைவியின் செல்போனில் சில ஆண்களின் புகைப்படங்களைப் பார்த்து, ‘அவர்கள் யார்?’ என்று கேட்டு தொடர்புப்படுத்தியும் பேசியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட பிரச்னையிலும் தற்கொலை செய்துகொள்வதற்காகத் தூக்குப்போட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்தேகப்பார்வை அதிகரித்துக்கொண்டே சென்ற வேளையில், திடீரென கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதனால், அர்ச்சனா எழுந்து நடக்க முடியாமல் தாய்வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

‘காதல் மனைவி தன்னிடமிருந்து விலகிச் செல்கிறாள்’ என்று நினைத்த அஜய்குமார் கடந்த ஒரு வாரமாக மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியைத் தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். ‘இப்போதுதான், அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது. இன்னும் சில நாள்கள் கழித்து அனுப்பி வைக்கிறேன். முதலில் உன்னுடைய சந்தேகப் பார்வையை மாற்றிக்கொள்’ என்று அஜய்குமாரை மாமியார் கண்டித்திருக்கிறார். நேற்றும் தகராறு நடந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அஜய்குமார் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பியிருக்கிறார். இன்று அதிகாலையில் திடீரென தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

வீடியோ பதிவிட்ட கடைசி நேரம்
வீடியோ பதிவிட்ட கடைசி நேரம்

தற்கொலைக்கு முன் செஃல்பி வீடியோவைப் பதிவு செய்து தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார். இன்று காலையில், அந்த வீடியோவைப் பார்த்த நண்பர்களும், உறவினர்களும் அஜய்குமாரின் வீட்டுக்குப் பதறியடித்து ஓடினர். உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அஜய்குமார் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கதறி அழுதனர். தகவலறிந்ததும், விரிஞ்சிபுரம் போலீஸார் சம்பவப் பகுதிக்கு விரைந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி: கவனிக்காத வாரிசுகள்; பீரோவில் பணம்’ - கலங்கவைத்த மூத்த தம்பதியின் தற்கொலை

இதனிடையே, தூக்கு மாட்டிக்கொண்டு அஜய்குமார் கடைசியாக பேசிய வீடியோவில், கண்ணீர் தோய்ந்த முகத்துடன் ‘டிங்க்கு’ என்று நண்பரின் பெயரை உச்சரித்துப் பேசுகிறார் அஜய்குமார். அதில், “உன் அண்ணியும் நானும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். நல்லா வாழ்ந்துகிட்டு இருந்த நேரத்துல அவ அம்மா வீட்டுக்கு போன பிறகு வேற மாதிரி பேசுறா. நம்ம வீட்டுக்குப் போகலாம்னு கூப்பிட்டும் வர மறுத்துட்டாள். மாமியாரும் அசிங்க அசிங்கமா பேசுறாங்க. ‘நீ எதுக்கு என் மகள்கிட்ட பேசுற, பிரிஞ்சிடு’ன்னு சொன்னாங்க. கூலி வேலை செய்றவன்னு அசிங்கப்படுத்துறாங்க. நைட் எல்லாம் தூக்கமே வரல. அதனாலதான் தூக்குப் போட்டுக்கிறேன்.

வீடியோவில் அழுத அஜய்குமார்
வீடியோவில் அழுத அஜய்குமார்

என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம், என் மனைவி அர்ச்சனாவும், மாமியார் கவிதாவும்தான். ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. காவல்துறைகிட்ட இந்த வீடியோவைக் கொடுங்க’’ என்று முடிக்கிறார். அதோடு அவரது வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது.

இது சம்பந்தமாக விரிஞ்சிபுரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, “தற்கொலைக்குத் தூண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்கு பதிவு செய்வதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. அஜய்குமார், சிறு பிரச்னை என்றாலும் தூக்கு மாட்டிக்கொள்ள ஓடுவார். அப்படியிருக்கக் கடைசியாக அவர் பதிவிட்ட வீடியோவை வைத்து முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு