வேலூர் ஓல்டு டவுன் எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சீனிவாசன், அங்குள்ள டீக்கடையில் வேலை செய்துவந்தார். நேற்று மாலை, தனது வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் பீடி வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சீனிவாசன் என்பவர் கஞ்சா மற்றும் குடிபோதையில் பொது மக்களிடம் தகராறு செய்தபடி வந்திருக்கிறார். பீடி வாங்கச் சென்ற சீனிவாசன் அவரைக் கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த போதையிலிருந்த நபர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சீனிவாசனை மார்பில் குத்திவிட்டு தப்பியிருக்கிறார். அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, சீனிவாசன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து, வழக்கு பதிவுசெய்த வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு கொலையாளியைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், உயிரிழந்த சீனிவாசனின் உறவினர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தெற்கு காவல் நிலையம் அருகே இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். ``எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை அமோ கமாக நடக்கிறது. போலீஸார் கண்டுகொள்வதே இல்லை. குற்றச்சம்பவங்களும் தொடர்கின்றன’’ என்று குற்றம்சாட்டினர்.

அப்போது, பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சீனிவாசனின் உடலையும் சாலையில் இறக்கிவைத்துப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சமாதானம் செய்ய முயன்ற போலீஸாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. நீண்ட நேர சமரச முயற்சிக்குப் பின்னர் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சீனிவாசனின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.